ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமான கொத்தமல்லி ஊறுகாய் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
5 October 2022, 9:19 am

ஆந்திராவின் ஸ்பெஷல் ரெசிபியான கொத்தமல்லி ஊறுகாய் பற்றி தான் இந்த பதிவு. இதனை ஊறுகாய் என்றும் சொல்லலாம், துவையல் என்றும் கூறலாம். இது சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து விதமான உணவுகளுக்கும் செம காம்பினேஷனாக இருக்கும். இப்போது இந்த கொத்தமல்லி ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
கடுகு- 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி
வர மிளகாய்- 9
கறிவேப்பிலை- ஒரு கொத்து
புளி
உப்பு
நல்லெண்ணெய்

செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

*இது பாதி வறுப்பட்டதும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து வறுத்து கொள்ளலாம்.

*மூன்றுமே வறுப்பட்டவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து தனியாக வைக்கவும்.

*இப்போது அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 8 வர மிளகாய் சேர்த்து வறுத்து ஒரு தட்டில் ஆற வைக்கவும்.

*பின்னர் சுத்தம் செய்த கொத்தமல்லி தழையை போட்டு அதையும் வதக்கி எடுத்து கொள்ளலாம்.

*தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட புளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி வைக்கவும்.

*இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த கொத்தமல்லி, வர மிளகாய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

*அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி கடுகு, 1 வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*பின்னர் அரைத்து வைத்த கொத்தமல்லி பேஸ்ட் மற்றும் கடுகு பொடியையும் சேர்த்து கிளறவும்.

*இதிலுள்ள தண்ணீர் அனைத்தும் வற்றியதும் அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி ஊறுகாய் தயார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!