தீபாவளி ஸ்பெஷல்: தனித்துவமான ருசில பாம்பே ஸ்பெஷல் ஐஸ் ஹல்வா!!!
Author: Hemalatha Ramkumar23 October 2024, 7:38 pm
பலகாரங்கள் இல்லாமல் தீபாவளி இருக்குமா? பொதுவாக தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், லட்டு, ஜாங்கிரி, ஜிலேபி, பாதுஷா, மிக்சர், காராசேவு, அதிரசம் போன்ற பலகாரங்களை வழக்கமாக செய்வோம். ஆனால் இந்த தீபாவளிக்கு சற்று வித்தியாசமாக பாம்பே ஸ்பெஷல் ஐஸ் அல்வா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உடனே இந்த பலகாரத்தை செய்ய அதிக நேரம் எடுக்குமோ என்று பயப்படாதீர்கள். இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. இப்போது பாம்பே ஸ்பெஷல் ஐஸ் அல்வா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால்
மைதா மாவு
நெய்
சர்க்கரை
ஏலக்காய் பொடி
பாதாம்
முந்திரி
பிஸ்தா
செய்முறை
*பாம்பே ஸ்பெஷல் ஐஸ் அல்வா செய்வதற்கு ஒரு வாணலியில் 1/2 கப் பால், 1/2 கப் மைதா மாவு, 1/2 கப் நெய் மற்றும் 3/4 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
*வாணலியை இப்பொழுது அடுப்பில் வைக்க தேவையில்லை.
*முதலில் எந்த ஒரு கட்டியும் இல்லாமல் அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
*பிறகு உங்களுக்கு விருப்பமான ஃபுட் கலர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும்.
*ஃபுட் கலர் உங்களுக்கு பிடிக்காவிட்டால் அதனை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
*இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலியை அடுப்பில் வைக்கவும்.
*அடுப்பை லோ ஃபிளேமை விட அதிகமாக ஆனால் மீடியம் ஃபிளேமை விட சற்று குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.
*கைவிடாமல் கலவையை கிளறி கொண்டே இருக்கவும்.
*கலவை நன்றாக கெட்டியாக அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
* சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளலாம்.
*அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஒரு பட்டர் பேப்பரை விரித்து அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை சப்பாத்தி கட்டை வைத்து மெலிசாக பரப்பிக் கொள்ளவும்.
*மாவை நன்றாக பரப்பிய பிறகு 10 பாதாம், 10 முந்திரி மற்றும் 10 பிஸ்தா பருப்புகளை பொடியாக நறுக்கி அதனை மாவின் மீது தூவி மீண்டும் சப்பாத்தி கட்டை வைத்து லேசாக அழுத்தவும்.
*இந்த சமயத்தில் உங்களுக்கு பிடித்தமான அளவுகளில் பீஸ் போட்டுக் கொள்ளவும்.
*இதனை 3 மணி நேரம் கழித்து சுவைத்து மகிழலாம். என்ன… இந்த ரெசிபிய நிச்சயமாக வர தீபாவளிக்கு டிரை பண்ணி பாருங்க..!