முட்டைகோஸ்ல செஞ்சது தானான்னு கேட்பாங்க… யுனிக் டேஸ்ட்ல முட்டைகோஸ் எக் பொடிமாஸ்!!!

Author: Hemalatha Ramkumar
19 October 2024, 7:46 pm

முட்டைக்கோஸில் என்ன தான் வகை வகையாக உணவு செய்து கொடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடிய ஒரு வித வாசனையின் காரணமாக சிலர் அதனை தவிர்த்து விடுவார்கள். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் முட்டைகோஸ் எக் பொடிமாஸ் செய்து கொடுத்துப் பாருங்கள்… நிச்சயமாக அது முட்டைகோஸ் தானா என்று ஆச்சரியமாக கேட்பார்கள். அந்த அளவிற்கு இது சுவையாக மட்டுமல்லாமல், முட்டைகோஸ் இருப்பதே தெரியாத அளவுக்கு இருக்கும். இப்போது முட்டைகோஸ் எக் பொடிமாஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

முட்டைகோஸ் – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 4 பல்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

முட்டை – 2

கடலை எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1/2 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி

செய்முறை 

முட்டைகோஸ் எக் பொடிமாஸ் செய்வதற்கு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம் பருப்பு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் அதில் பொடியாக நறுக்கிய ஒரு கப் முட்டைகோசை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு இடையில் ஒரு மிக்ஸி ஜாரில் 4 பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். 

அரைத்த இந்த மசாலாவை முட்டைகோஸில் சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக கிளறவும். தண்ணீர் அனைத்தும் வற்றியவுடன் நடுவில் ஒரு குழி அமைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றவும். 

முட்டையை நன்றாக கலந்து முட்டைக்கோஸோடு மிக்ஸ் ஆகும்படி நன்றாக கலக்கிக் கொள்ளவும். இப்போது இந்த முட்டைகோஸ் எக் பொடிமாசுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 டேபிள் ஸ்பூன் அளவு மிளகு பொடி தூவி கிளறி 5 முதல் 7 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டியதுதான். சுவையான முட்டைகோஸ் எக் பொடிமாஸ் இப்போது தயாராக உள்ளது. இதனை தொட்டுக்கையாக மட்டுமல்லாமல் வெறும் சாதத்திற்கு கூட பிசைந்து சாப்பிடலாம். சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்..!

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…