இந்த மாதிரி சிக்கன் குழம்பு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க… அப்படி ஒரு ரெசிபி இது!!!
Author: Hemalatha Ramkumar23 September 2024, 6:54 pm
பொதுவாக இறைச்சி வகைகளில் பெரும்பாலான நபர்கள் விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிற இறைச்சிகளை காட்டிலும் சற்று விலை குறைவானது மற்றும் சமைப்பதற்கும் எளிமையானது. ருசியும் அட்டகாசமாக இருக்கும். சிக்கன் குழம்பை பல்வேறு விதமாக செய்யலாம். அந்த வகையில் மிகவும் எளிமையான முறையில் விரைவாக செய்யக்கூடிய ஒரு சிக்கன் குழம்பு ரெசிபி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த சிக்கன் குழம்பு சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி, நான் மற்றும் சாதம் ஆகிய அனைத்திற்கும் அற்புதமான சைட் டிஷ் ஆக இருக்கும். இப்போது இந்த சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
செய்முறை
சிக்கன் குழம்பு செய்வதற்கு ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் 2 பிரியாணி இலை, 2 பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1/4 டீஸ்பூன் சோம்பு, ஒரு சின்ன அன்னாசி பூ, ஒரு சிறிய துண்டு கல்பாசி மற்றும் 2 வரமிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின்னர் ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து அந்த விழுதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கியதும் 1/2 கிலோ சிக்கனை சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த சிக்கன் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடலாம். இந்த சமயத்தில் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த 10 முந்திரி பருப்பை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
குழம்பில் புலம்பு கொதித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த முந்திரி பருப்பு விழுதை சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து கிளறவும்.
இதனை மிதமான சூட்டில் மூடி போட்டு 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இப்போது எண்ணெய் பிரிந்து குழம்பு தயாராக இருக்கும் இந்த சமயத்தில் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு குழம்பை மூடி வைக்கவும்.
அவ்வளவுதான் இப்போது அருமையான சிக்கன் குழம்பு பரிமாறுவதற்கு தயாராக உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.