தக்காளி, வெங்காயம் சேர்க்காத அசத்தலான நாவூறும் முட்டை மசாலா!!!
Author: Hemalatha Ramkumar28 June 2023, 6:47 pm
ஏராளமான அசைவ உணவு வகைகள் இருந்தாலும், நாம் அதிகமாக சமைக்க தேர்ந்தெடுப்பது முட்டை தான். முட்டையை ஈசியாக சமைத்து விடலாம். காய்கறி இல்லாத சமயத்தில் தொட்டுக்கொள்ள ஏதாவது சைடு டிஷ் பற்றி யோசிக்கும் பொழுது இரண்டு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு விடுவோம். முட்டையை வைத்து பலவிதமான டிஷ்களை நாம் செய்யலாம். அந்த வகையில் பலரும் விருப்பப்பட்டு சாப்பிடும் ஒன்று முட்டை மசாலா. ஆனால் முட்டை மசாலாவை வெங்காயம், தக்காளி சேர்க்காமல் செய்யலாம் என்று சொன்னால் நம்புவீங்களா? உண்மைதான் இந்த பதிவில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் முட்டை மசாலா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
முட்டை மசாலா தயாரிக்க முதலில் ஆறு முட்டைகளை தண்ணீரில் சேர்த்து வேகவைத்து அதன் தோலை உரித்து தனியாக எடுத்து வையுங்கள். வேகவைத்த முட்டையை கத்தியினால் இரு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது நாம் சேர்க்கும் மசாலா முட்டையின் உட்புறத்தில் சென்று நன்றாக ஊறி முட்டையின் ஒவ்வொரு கடியும் சுவையாக இருக்கும்.
இப்போது முட்டை மசாலா செய்வதற்கு நமக்கு ஒரு ஸ்பூன் மல்லி தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள், 1/4 ஸ்பூன் உப்பு, 1/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் ஆகியவை நமக்கு தேவைப்படும். இந்த மசாலா பொருட்கள் அனைத்தையும் முதலில் ஒன்றாக கலந்து வையுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்டாக கலக்கி வைக்கவும்.
நாம் கலந்து வைத்துள்ள இந்த பேஸ்டை நறுக்கி வைத்துள்ள முட்டையின் மீது நன்றாக தடவவும். இது ஐந்து நிமிடங்கள் ஊற வேண்டும். அடுத்து கடாயை அடுப்பில் வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அதிகமாக இருக்கிறதே என்று எண்ணாதீர்கள். முட்டை மசாலா செய்ய எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். எண்ணெய் காய்ந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
பின்னர் நாம் மசாலா தடவி வைத்த முட்டையை சேர்த்து நன்றாக இருபுறமும் திருப்பி வேகவைக்கவும். முட்டையின் இரண்டு பக்கங்களும் சிவந்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக பிரட்டவும். கடைசியாக கொத்தமழை தழை தூவி பரிமாறவும். சாம்பார் சாதம், ரசம் சாதம், அனைத்து வகையான வெரைட்டி சாதம் என இந்த முட்டை மசாலாவை எல்லா வகையான சாதத்துடனும் சாப்பிடலாம். பிரியாணியுடன் சாப்பிட கூட இது அருமையாக இருக்கும். கண்டிப்பாக சமைத்து பாருங்கள்.