ஃபிரஷான கரம் மசாலா இனி வீட்டிலே செய்யலாம்!!!

Author: Hemalatha Ramkumar
1 July 2023, 7:23 pm

பொதுவாக மசாலா பொருட்கள் என்றாலே இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும். இந்த மசாலா பொருட்கள் உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு மற்றும் காரம் ஆகியவை ஒரு சீரான கலவையாக அறியப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும் வைத்து தயாரிக்கப்படும் மசாலா கரம் மசாலா என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாசனை மிகுந்த தூளை பல்வேறு உணவுகளில் சுவையை கூட்ட பயன்படுத்தலாம். இது கடைகளில் கிடைத்தாலும், ஃபிரஷாக வீட்டில் செய்வது போல வராது. கரம் மசாலா தூளை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைக்கவும். கடாய் சூடானதும் முதலில் மிளகு சேர்க்கவும். அதன் வாசனை வெளியே வரும் வரை அதனை லேசாக வறுக்கவும். மிதமான தீயில் சுமார் 3 நிமிடங்கள் வறுத்தால் போதும்.

வறுத்த மிளகுடன் நட்சத்திர சோம்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். உங்களிடம் உரல் இருந்தால் அதில் அரைப்பது இன்னும் சிறந்தது.

இப்போது தனியாக இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கிராம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இந்த தூளை நைசாக அரைக்க வேண்டும். கரடுமுரடாக இருக்கக்கூடாது. இரண்டு துளையும் ஒன்றாக கலக்கவும்.

இந்த தூளை காற்று புகாத ஒரு பாட்டில் அல்லது ஜாரில் போட்டு வையுங்கள். நீங்கள் இதை கறி குழம்பு, பிரியாணி, புலாவ் மற்றும் பல உணவுகளில் பயன்படுத்தலாம். இது காரமான, கம கம மணத்தோடு உணவின் சுவையை அதிகரிக்கும்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!