பேச்சுலர்ஸ் ரெசிபி: சட்டென்று தயாராகும் பச்சை முட்டை சாதம்!!!

Author: Hemalatha Ramkumar
27 September 2024, 11:19 am

குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு வித்தியாசமான லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த ரெசிபி நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனை மிக எளிதாக செய்துவிடலாம். அதே சமயத்தில் இது அவ்வளவு சுவையாகவும் இருக்கும். இது சட்டென்று செய்துவிடக் கூடிய ஒரு ரெசிபி என்பதால் பேச்சுலர்ஸுக்கும் ஏற்றதாக அமைகிறது. வடித்த சாதம் மட்டும் இருந்தால் போதும் ஒரு சில பொருட்களை மட்டுமே கொண்டு இந்த சுவையான பச்சை முட்டை சாதத்தை செய்து விடலாம். வீட்டில் மதியம் வடித்த சாதம் மீந்துவிட்டால் கூட இரவுக்கு இந்த பச்சை முட்டை சாதம் செய்து கொடுத்தால் நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கலாம்.

பச்சை முட்டை சாதம் செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, சிறிதளவு கொத்தமல்லி தழை, 5 தோல் உரித்த பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், 4 முதல் 5 சின்ன வெங்காயம் ஆகியவற்றை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 2 குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து விட்டு நாம் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

இந்த சமயத்தில் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 2 நிமிடங்கள் நன்றாக கிளறிய பிறகு 2 கப் வடித்த சாதத்தை சேர்த்து வதக்கவும். அவ்வளவுதான் மிக எளிதாக தயாராகி விட்டது நம்முடைய பச்சை முட்டை சாதம். இதற்கு வத்தல், அப்பளம், ஊறுகாய் இருந்தாலே போதும். வேறு எந்த சைடு டிஷும் தனியாக செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நிச்சயமாக இதனை ட்ரை பண்ணி பாருங்க.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 339

    1

    0