ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ல இன்ஸ்டன்ட் வெங்காய ஊறுகாய்… பார்க்கும் போதே எச்சில் ஊறுது!!!
Author: Hemalatha Ramkumar28 September 2024, 7:32 pm
ரெஸ்டாரண்டுகளில் பொதுவாக வெங்காய ஊறுகாய் வைத்து உணவு பரிமாறுவார்கள். இதனை எப்படி செய்திருப்பார்கள் என்று கட்டாயமாக நீங்கள் யோசித்து இருக்கலாம். ஏனென்றால் அது அவ்வளவு அலாதியான சுவையில் இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிது. மிகக் குறைந்த பொருட்களுடன் ஐந்தே நிமிடங்களில் தயாராகும் இந்த இன்ஸ்டன்ட் வெங்காய ஊறுகாய் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்த இன்ஸ்டன்ட் வெங்காய ஊறுகாய் செய்வதற்கு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, 1/4 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனோடு ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் ஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தில் 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து அனைத்து துண்டுகளும் தனித்தனியாக இருக்கும் வகையில் பிரட்டி வைக்கவும். 2 நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து மசாலா வெங்காயத்தோடு நன்கு கோட்டிங் ஆகும்படி பிரட்டிக் கொள்ளவும். இதனை பிரட்டுவதற்கு ஸ்பூனை விட கைகளை பயன்படுத்துங்கள். வெங்காயத்தோடு மசாலா நன்றாக ஒட்டி வரும் பிறகு இரண்டு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை சூடு செய்து இந்த வெங்காயத்தில் ஊற்றவும். புளிப்பு சுவைக்காக சிறிதளவு வினிகர் சேர்த்து கிளறினால் அருமையான வெங்காய ஊறுகாய் தயார். இது சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.