தீபாவளி ஸ்பெஷல்: மூன்றே பொருட்களை வைத்து ஹெல்தியான இன்ஸ்டன்ட் அல்வா!!!
Author: Hemalatha Ramkumar25 October 2024, 7:39 pm
தற்போது மக்கள் அனைவரும் ஆரோக்கியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மைதா போன்ற வெள்ளை நிற உணவு பொருட்களை தவிர்க்க ஆரம்பித்து விட்டனர். மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. மைதா மாவில் செய்தால் தான் சுவையாக இருக்கும் என்றெல்லாம் கிடையாது. கோதுமை மாவில் செய்தால் கூட நம்மால் அதே அளவு ருசியை கொண்டு வர முடியும். இந்த பதிவில் கோதுமை மாவு வைத்து இன்ஸ்டன்ட் ஆக அல்வா எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். இந்த அல்வா செய்வதற்கு நமக்கு மூன்றே பொருட்கள் இருந்தால் போதும், மிக எளிதாக செய்து முடித்து விடலாம். இப்போது இன்ஸ்டன்ட் கோதுமை அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
நெய் சர்க்கரை
முந்திரி பருப்பு
செய்முறை
*இன்ஸ்டன்ட் அல்வா செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் நெய் ஊற்றவும்.
*நெய் உருகியதும் 1/4 கப் அளவு முந்திரிப்பருப்பு சேர்த்து அதனை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரி பருப்பை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
*பிறகு இதே நெய்யில் 1/2 கப் கோதுமை மாவு சேர்த்து வறுக்கவும்.
*அடுப்பை மிதமான தீயில் வைத்து கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரையில் வறுத்துக் கொள்ளுங்கள்.
*மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு அளந்த அதே கப்பில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: லேட்-நைட்ல வொர்க்அவுட் பண்றது நல்லதா… கெட்டதா… ஆராஞ்சு பார்த்திடுவோமா!!!
*கோதுமை மாவு வறுபட்டதும் இந்த தண்ணீரில் ஒரு கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள்.
*மாவு ஓரளவு வெந்த பிறகு மீதம் இருக்கக்கூடிய தண்ணீரையும் சேர்த்து மாவை கிளறவும்.
*மாவு நன்றாக வெந்து திரண்டு வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
*கடாயில் ஒட்டாமல் மாவு திரண்டு வந்த பிறகு 2 ஸ்பூன் அளவு சர்க்கரையை கேரமலைஸ் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
*இது நாம் செய்யக்கூடிய அல்வாவிற்கு நிறத்தையும், கூடுதல் ஃபிளேவரையும் அளிக்கும்.
*பின்னர் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து 15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும்.
*இப்போது நாம் வறுத்து வைத்த முந்திரி மற்றும் மேலும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
*ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை இதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
*அவ்வளவுதான் நம்முடைய சுவையான இன்ஸ்டன்ட் அல்வா இப்போது தயார்.