மட்டன் கோலா உருண்டைக்கே டஃப் கொடுக்கும் சோயா சங்ஸ் கோலா உருண்டை!!!
Author: Hemalatha Ramkumar2 October 2024, 7:34 pm
கோலா உருண்டை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது மட்டன் கோலா உருண்டை தான். ஆனால் மட்டன் கோலா உருண்டைக்கே டஃப் கொடுக்கும் வகையில் சோயா சங்ஸில் கோலா உருண்டை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். இதனை வெறும் 15 நிமிடங்களில் செய்துவிடலாம். சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இப்போது சோயா சங்ஸ் கோலா உருண்டை ரெசிபியை பார்க்கலாம்.
சோயா சங்ஸ் கோலா உருண்டை செய்வதற்கு 1 1/2 கப் அளவு சோயா சங்ஸ் எடுத்து அதனை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 2 நிமிடங்கள் போட்டு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு கடாயில் ஒரு கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, 2 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, 1/4 தேக்கரண்டி சோம்பு, 1/4 தேக்கரண்டி சீரகம், 2 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி மிளகு ஆகியவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் இதனோடு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் நாம் ஊற வைத்து எடுத்த சோயா சங்ஸை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து கடாயில் உள்ள பிற பொருட்களோடு சேர்த்து கிளறவும்.
பின்னர் இதற்கு தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு கலவை வெதுவெதுப்பாக மாறியதும் மிக்ஸி ஜாரில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த இந்த கலவையோடு ஒரு கப் பொட்டுக்கடலை மாவு, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் இந்த உருண்டைகளை போட்டு பொறித்து எடுக்கவும். உருண்டைகளை எண்ணெயில் போட்ட உடனேயே கரண்டி வைத்து கிளறி விட வேண்டாம். 2 நிமிடங்கள் காத்திருந்த பிறகு திருப்பி போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா சங்ஸ் கோலா உருண்டை தயார்!!