வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் பத்தே நிமிடங்களில் தயாராகும் ரவை பைனாப்பிள் குழிபணியாரம் செய்து கொடுத்து அசத்துங்க!!!

Author: Hemalatha Ramkumar
25 September 2024, 7:08 pm

திடீரென்று வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து விட்டால் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஏதேனும் இனிப்புகள் இல்லாத சமயத்தில் அவசர அவசரமாக கேசரி அல்லது பாயாசம் போன்றவற்றை நாம் தயார் செய்வோம். ஆனால் எப்போதும் இதே மாதிரியான போர் அடிக்கும் இனிப்பு வகைகளை செய்வதை விட மிகவும் வித்தியாசமான பைனாப்பிள் ரவை பணியாரம் செய்து பாருங்கள். நிச்சயமாக அவர்கள் உங்களை பாராட்டுவார்கள். இது அப்சைட் டவுன் பைனாப்பிள் கேக். இதனை செய்வதற்கு நமக்கு மைக்ரோவேவ் ஓவன் எதுவும் தேவையில்லை. இப்போது இந்த பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

பணியாரம் செய்வதற்கு 1/2 கப் ரவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு அகலமான பவுலில் மாற்றி இதனோடு 1/4 கப் மைதா மாவு, 6-8 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் 2 டேபிள் ஸ்பூன் தயிர், வாசனைக்காக 1/4 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 டீஸ்பூன் சோடா உப்பு மற்றும் இறுதியாக 1/4 கப் அளவு பால் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு காய்த்து ஆற வைத்த பாலை பயன்படுத்துங்கள். 

மாவின் பதம் அதிக கெட்டியாகவோ அல்லது அதிக தண்ணியாகவோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதனை நாம் குழிப்பணியார சட்டி ஒன்றில் செய்யப்போகிறோம். ஒருவேளை உங்கள் வீட்டில் குழி பணியாரம் சட்டி இல்லை என்றால் அதனை ஒரே பேனில் ஒட்டு மொத்தமாக சேர்த்து செய்யலாம். குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானவுடன் அதில் ஒவ்வொரு குழியிலும் 1/4 டீஸ்பூன் அளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். 

இதன் மீது ஒவ்வொரு குழியிலும் 1/2 டீஸ்பூன் அளவு பிரவுன் சுகர் அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய குழி பணியாரத்திற்கு கேரமலைஸுடு பதத்தை கொடுக்கும். இப்போது அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஒரு சில துண்டுகளை ஒவ்வொரு குழியிலும் வைக்கவும். இதற்கு அன்னாசி பழம் தான் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு விருப்பமான பழங்கள் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். 

இப்போது இந்த பைனாப்பிள் மீது நாம் தயார் செய்து வைத்த மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு மீண்டும் ஒரு நிமிடம் மட்டும் வைத்து எடுத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான ரவை பைனாப்பிள் பணியாரம் தயாராக உள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • director tamizh strory சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
  • Views: - 294

    0

    0