இன்று கால்சியம் குறைபாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைதான். நமது முன்னோர்கள் அடிக்கடி கேழ்வரகு சார்ந்த உணவுகளை சாப்பிட்டு வந்ததால் தான் அவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படாமல் நல்ல எலும்பு ஆரோக்கியத்தை கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன உலகில் மிகச் சிலரே கேழ்வரகு, கம்பு, தினை வகைகளை சாப்பிடுகின்றனர். முழுக்க முழுக்க கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகை அடிக்கடி நம்முடைய உணவில் சேர்த்து வந்தால் வலுவான எலும்புகளை பெறலாம். கேழ்வரகு என்றாலே போரடிக்கும் உணவு தான் கிடைக்கும் என்று எண்ணி விடாதீர்கள். கேழ்வரகு வைத்து சுவையான லட்டு எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கேழ்வரகு சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த லட்டை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
வேர்க்கடலை 1/2 கப்
உலர்ந்த திராட்சை – 1/2 கப்
எள் விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் -5 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1/2 கப்
ஏலக்காய் – 4
செய்முறை
கேழ்வரகு லட்டு செய்வதற்கு முதலில் ஒரு கப் கேழ்வரகு மாவு எடுத்துக் கொள்ளவும். வாணல் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நெய் உருகியதும் கேழ்வரகு மாவை சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
மாவு வறுபட்டதும் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். இப்போது அதே வாணலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எள் விதைகளை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். எள் விதைகள் பொன்னிறமாக மாறியதும் அவற்றையும் தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1/2 கப் அளவு வேர்க்கடலை சேர்த்து வேர்க்கடலை கருகி விடாமல் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை தோல் உரித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளுங்கள். வேர்க்கடலையை அரைக்கும் பொழுது அதிலிருந்து லேசாக எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு அரைத்தால் போதுமானது.
இப்போது அரைத்த இந்த வேர்க்கடலை பேஸ்டோடு சேர்த்து 1/2 கப் அளவு உலர்ந்த திராட்சை சேர்த்து அரைக்கவும். திராட்சைக்கு பதிலாக நீங்கள் பேரீச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதே கலவையோடு 1/2 கப் அளவு வெல்லம் மற்றும் 4 ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
இப்போது இந்த அரைத்த கலவையோடு நாம் வறுத்து வைத்த கேழ்வரகு மாவையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த பொருட்ளை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நாம் வறுத்து வைத்த எள் விதைகளை சேர்த்து கிளறவும். எள் பிடிக்காதவர்கள் வறுத்த முந்திரி பருப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: வேற லெவல் டேஸ்ட்ல முருங்கைக்காய் தீயல் ரெசிபி!!!
மாவோடு 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு மாவு லட்டு தயாராக உள்ளது.