மாலை நேரத்திற்கு ஏற்ற சூடான சுவையான ஸ்டஃப் செய்யப்பட்ட பஜ்ஜி!
Author: Hemalatha Ramkumar5 March 2023, 7:26 pm
பஜ்ஜி என்றாலே நம் அனைவருக்குமே பிடிக்கும். பொதுவாக நாம் மாலை நேரங்களில் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களில் இதுவும் ஒன்று. மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, முட்டை பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, என பல வகையான பஜ்ஜிகள் உள்ளன. ஆனால், நாம் எப்பொழுதும் உண்ணும் இவைகளைத் தவிர்த்து ஒரு புது விதமான பஜ்ஜி உள்ளது. அது தான் ஸ்டஃப் செய்யப்பட்ட பஜ்ஜி. பெயர் குறிப்பிடுவது போல், இதற்கு நாம் ஸ்டஃப்பிங் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சரி வாருங்கள் இது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மாவு
பீன்ஸ் – 10
கேரட் – 1
பஜ்ஜி மிளகாய் – 10
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
கார மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஸ்டஃப்பிங் செய்வதற்கு நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் பீன்ஸ் மற்றும் கேரட்டை நன்றாக தண்ணீர் கொண்டி அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து வாணலில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள பீன்ஸ் காய், கேரட் மற்றும் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் அதனை இறக்கி விடவும். பஜ்ஜி மிளகாயை கழுவி சுத்தம் செய்து, நடுவில் ஒரு கீறல் போட்டு, அதற்குள் நாம் செய்துஇ வைத்துள்ள கலவையை ஸ்டஃப் செய்ய வேண்டும்.
- பஜ்ஜி போட கடையில் கிடைக்கும் ரெடிமேட் பஜ்ஜி மாவினைப் பயன்படுத்தலாம் அல்லது கடலை மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பஜ்ஜி மாவை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும் நாம் ஸ்டஃப் செய்து வைத்துள்ள மிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான பஜ்ஜி தயார்.
காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளுடன் உருளைக் கிழங்கை மசித்தும் ஸ்டஃப்பிங் தயார் செய்யலாம். நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு இதனை செய்து அசத்துங்கள்.