ஐந்தே நிமிடத்தில் தயாராகும் ருசியான வெங்காயத் துவையல்!!!
Author: Hemalatha Ramkumar22 April 2023, 7:34 pm
தினமும் டிபனுக்கு இட்லி, தோசை செய்யும் போது அதற்கு தொட்டு கொள்ள என்ன சைட் டிஷ் செய்வது என்று நாம் யோசிப்போம். ஏதேனும் வித்தியாசமான ரெசிபி செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்திருப்போம். ஆனால் வித்தியாசமாக செய்ய கூடுதல் நேரம் எடுக்கும் என்பதாலே வழக்கம் போல செய்யும் அதே சைட் டிஷ் செய்து விடுவோம். இன்று நாம் பார்க்க போகும் வெங்காய துவையலை சட்டென்று செய்து விடலாம். மிகவும் ருசியான இந்த வெங்காய துவையலை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்- 300 கிராம்
காய்ந்த மிளகாய்- 4
உளுத்தம்பருப்பு- 5 தேக்கரண்டி
புளி- சிறிதளவு
நல்லெண்ணெய்- 6 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
*முதலில் 300 கிராம் சின்ன வெங்காயத்தை தோலுரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
*இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து நல்லெண்ணையை ஊற்ற வேண்டும்.
*இதில் காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
*இதே எண்ணெயில் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதக்கி வைத்த பொருட்களை ஆறவைத்து கொள்ளவும்.
*இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*அம்மி இருப்பவர்கள் அம்மியிலேயே அரைத்து எடுத்தால் துவையல் கூடுதல் சுவையாக இருக்கும்.
*வெங்காயத் துவையலை தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கொட்டினால் சுவையான வெங்காய துவையல் தயார்.