தீபாவளி ஸ்பெஷல்: அலாதியான சுவையில் அவல் லட்டு!!!

Author: Hemalatha Ramkumar
24 October 2024, 7:50 pm

பண்டிகை காலத்தில் வகை வகையாக பலகாரங்கள் செய்து சாப்பிடுவது வழக்கம்  பொதுவாக கடலை மாவு பயன்படுத்தி பூந்தி செய்து அதில் லட்டு பிடித்து சாப்பிடுவோம். ஆனால் இந்த தீபாவளிக்கு சற்று வித்தியாசமாக அவல் மற்றும் சில நட்ஸ் வகைகளை கொண்டு லட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இந்த லட்டை மிகக் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்துவிடலாம்.

முதலில் ஒரு கப் தோலுரித்த வேர்க்கடலையை ஒரு கடாயில் சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளுங்கள். வேர்க்கடலையை 2 நிமிடங்களுக்கு வறுத்தப்பிறகு அதில் 1/4 கப் அளவு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை 30 வினாடிகளுக்கு மட்டும் வறுத்தால் போதும். அடுத்தபடியாக ஒரு கப் அளவு கெட்டி அவல் சேர்த்துக் கொள்ளலாம். பொருட்கள் அனைத்தையும் 2 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் ரோஸ்ட் செய்யுங்கள். 

அவல் நன்றாக வறுபட்டதும் இந்த பொருட்களை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளலாம். இப்போது அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி 10 முந்திரி பருப்பை ஒன்றும் பாதியுமாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதனோடு 10 உலர்ந்த திராட்சைகளையும் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: பாரபட்சம் காட்டாமல் எல்லா சரும பிரச்சினைக்கும் தீர்வு தரும் கற்றாழை!!!

இப்போது வெல்ல பாகு தயார் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் 3/4 கப் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லம் முழுவதுமாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்துக்கொள்ளவும். இதற்கு இடையில் நாம் வறுத்து வைத்த பொருட்களை ரவை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது வெல்லப்பாகை அகலமான ஒரு பாத்திரத்தில் வடிகட்டி சேர்த்து அடுப்பில் வைக்கவும். 

வெல்லப்பாகு சூடாகும் போது அதில் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். பின்னர் நாம் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். கலவை கெட்டியானவுடன் வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து மேலும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்போது இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டை பிடிக்கவும். மாவு ஒன்றாக திரண்டு வராவிட்டால் கையில் நெய் தடவிக் கொண்டு லட்டு பிடிக்கவும். இதே போல அனைத்து மாவையும் உருண்டை பிடித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான அவல் லட்டு தயார்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 259

    0

    0