வீடே கமகமக்கும் முட்டைகோஸ் கூட்டு ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
26 April 2022, 1:25 pm

முட்டைகோஸ் என்றாலே சிலர் விரும்பி ‌சாப்பிடுவர். ஆனால், குழந்தைகள் சிலர் இதனை சாப்பிட மாட்டார்கள்.‌ அவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த முட்டைகோஸ் கூட்டு. குழம்பு சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும். இந்த முட்டைகோஸ் கூட்டு செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. அதிக சத்துக்கள் நிறைந்த முட்டைகோஸ் கூட்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான முட்டைகோஸ் கூட்டு கமகமக்கும் மணத்துடன் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் – 1/4 கிலோ
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 1
தக்காளி – 1
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுந்து – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
தேங்காய் – 1கப்
சோம்பு – 1ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்
வரமிளகாய் – 3
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:
*முதலில் ஒரு விழுது அரைத்து கொள்ள வேண்டும். அதற்கு, தேங்காய்,‌ சோம்பு, பூண்டு, வரமிளகாய், சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பிறகு, முட்டைகோஸை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*தாளித்தவுடன், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், மஞ்சள்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

*முட்டைகோஸ் அரைபதம் வெந்தவுடன். அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து முட்டைகோஸ் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* இந்த முட்டைகோஸ் கூட்டு, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த முட்டைகோஸ் கூட்டை சாதத்துடன் பிசைந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி ‌சாப்பிடுவர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!