பொலந்தெடுக்கும் வெயிலை சமாளிக்க குளு குளு குல்பி…அதுவும் வீட்டிலே செய்யலாம்!!!
Author: Hemalatha Ramkumar17 April 2023, 7:24 pm
கோடை காலம் வந்தாலே ஜில்லென்று எதையாவது சாப்பிட வேண்டும் போன்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். விடுமுறை வந்துவிட்டதால் குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு கடைகளில் இருந்து ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவற்றை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி குளு குளு குல்பி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர்
பாதாம் பருப்பு – 15 முந்திரிப் பருப்பு – 15 ஏலக்காய் – 7
சர்க்கரை – 1/2 கப்
காய்ந்த தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
செய்முறை:
*குல்பி செய்வதற்கு முதலில் ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து அது பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
*இந்த பாலை ஆற வைத்துக் கொள்ளலாம்.
*இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
*இதனோடு காய்ந்த தேங்காய் துருவலை சேர்த்து கலந்து கொள்ளலாம்.
*காய்ந்த தேங்காய் துருவல் இல்லாத பட்சத்தில் சாதாரண தேங்காய் துருவல் சேர்த்து முந்திரி பாதாம் அரைக்கும் போது அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
*இப்பொழுது காய்ச்சி ஆற வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரைத்த பாதாம், முந்திரி பொடியில் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலக்க வேண்டும்.
*கலந்த இந்த பாலை டம்பளர்களுக்குள் ஊற்றவும்.
*பின்னர் அலுமினியம் ஃபாயில் கொண்டு டம்ளரை மூடவும். அலுமினியம் ஃபாயில் இல்லாதவர்கள் சாதாரண பிளாஸ்டிக் பைகளை கூட பயன்படுத்தலாம்.
*பின்னர் ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு ஐஸ்கிரீம் குச்சியை நடுவில் குத்தி வைத்துக் கொள்ளவும்.
*இதனை பிரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் 8 முதல் 10 மணி நேரம் வரை வைக்கவும்.
*பின்னர் வெளியே எடுத்து ஐந்து முதல் பத்து நொடி சாதாரண தண்ணீரில் டம்ளரை காட்டவும்.
*இப்பொழுது ஐஸை வெளியே எடுப்பது சுலபமாக இருக்கும்.
*வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்த அருமையான குல்பி இப்போது தயார்.