அதிக மசாலா சேர்க்காமல் ருசியான வெள்ளை மட்டன் பிரியாணி!!!
Author: Hemalatha Ramkumar13 June 2023, 7:35 pm
மட்டன் எடுத்தால் எப்பொழுதும் மட்டன் பிரியாணி அல்லது மட்டன் குழம்பு தான் வைக்க வேண்டும் என்பதில்லை. மட்டன் புலாவ் என்று சொல்லப்படக்கூடிய வெள்ளை பிரியாணியையும் செய்து சாப்பிடலாம். அதிக மசாலாவை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இது ஒரு அற்புதமான நான்-வெஜ் ரெசிபி ஆகும். இதனை எப்படி செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம்.
மட்டன் புலாவ் செய்வதற்கு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் உருகி எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பிரியாணி இலை, 4 ஏலக்காய், 4 கிராம்பு, சிறிதளவு கசகசா, ஒரு துண்டு பட்டை சிறிதளவு கல்பாசி போன்றவற்றை சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கவும். இப்பொழுது மூன்று நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து அது பிரவுன் நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இப்போது பச்சை மிளகாய் மற்றும் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து ஒரு கையளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.
இந்த சமயத்தில் அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளலாம். அடுத்ததாக அரை கிலோ அளவு மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதனை சேர்த்துக் கொள்ளலாம். மட்டனிலிருந்து தண்ணீர் வெளியே வரும் வரை அதனை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் ஒன்றை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
பின்னர் பிரஷர் அடங்கியதும் 10 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தம் செய்து எடுத்த மூன்று கப் பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். இதில் மூன்று கப் பாஸ்மதி அரிசிக்கு 6 கப் தண்ணீர் என்ற அளவிற்கு மூன்று கப் தண்ணீர் மற்றும் 3 கப் தேங்காய் பால் சேர்த்து கிளறவும் குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து பத்து நிமிடங்கள் சிம்மில் வைத்து பின்னர் அணைக்கவும். மீண்டும் 10 நிமிடங்கள் குக்கரை திறக்க வேண்டாம். பத்து நிமிடங்கள் கழித்து சுவையான மட்டன் புலாவை வெங்காய பச்சடி மற்றும் ஏதேனும் கிரேவி உடன் பரிமாறவும்.