தக்காளி உளுந்து சட்னி… இத விட சிம்பிளாவும் டேஸ்டாவும் சட்னி செய்ய முடியுமா என்ன???
Author: Hemalatha Ramkumar9 October 2024, 7:37 pm
இட்லி, தோசை என்றாலே அலுத்துக் கொள்பவர்கள் கூட இந்த சட்னி செய்து கொடுத்தால் நிச்சயமாக கூட ரெண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த சட்னியை குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சிம்பிளாக செய்துவிடலாம். ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கருப்பு உளுந்து – 4 டீஸ்பூன்
தக்காளி – 3
கறிவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
வர மிளகாய் – 6
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை
சிம்பிளான தக்காளி உளுந்து சட்னி செய்வதற்கு முதலில் தாளிப்பதற்கு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்த உடன் 1/2 டீஸ்பூன் சீரகம், 4 வர மிளகாய், 5 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பூண்டு நிறம் மாறியவுடன் 4 டீஸ்பூன் கருப்பு உளுந்து சேர்த்து வதக்கவும். கருப்பு உளுந்து இல்லாத பட்சத்தில் முழு வெள்ளை உளுந்தையும் பயன்படுத்தலாம். இதனோடு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் 3 பெரிய சைஸ் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தேவைப்பட்டால் இதனோடு நீங்கள் சிறு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சட்னிக்கு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறவும். தக்காளி மசிந்து வதங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த சட்னியில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஓரளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டால் போதுமானது. இப்போது இதற்கு ஒரு தாளிப்பு கொடுப்பதற்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி விடவும். இந்த சட்னி இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.