பொதுவாக தென்னிந்திய உணவுகளில் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம் மற்றும் பாயாசம் போன்றவை இருக்கும். நாம் வீடுகளில் சிம்பிளாக செய்யும்போது கூட குறைந்தது ஒரு குழம்பு, ரசம், மற்றும் பொரியல் இருக்கும். இந்த மெனுவில் வரும் ரசம் சுவைக்காக மட்டும் அல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை செரிமானம், சளி, இருமல் போன்ற கோளாறுகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது.
ஒரு சிலருக்கு என்ன தான் ரசம் செய்தாலும் சுமானாக தான் வரும். இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி போல ரசம் செய்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பெர்ஃபெக்ட்டான ரசம் கிடைக்கும். இப்போது ஈசியான முறையில் கமகமக்கும் ரசம் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
ரசம் செய்ய முதலில் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடிக்கவும். இப்போது இதே பொடியோடு 7- 8 பல் பூண்டு, 4 கறிவேப்பிலை இலைகள், சிறிதளவு கொத்தமல்லி தண்டு சேர்த்து ஒரே ஒரு பல்ஸ் மட்டும் கொடுக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து 1 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். மிளகாய் கருகி விடக்கூடாது. பின்னர் நாம் அரைத்து வைத்த கலவையை ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் இரண்டு தக்காளி பழத்தை கையாள் பிழிந்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
சிறிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த கரைசலை ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும். தாராளமாக கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போதே அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்கவும். கமகமக்கும் ரசம் இப்போது தயார்.