இந்த தக்காளி குருமா அப்படியே பாயா மாதிரியே இருக்கும்… அவ்ளோ ருசி!!!
Author: Hemalatha Ramkumar7 April 2023, 4:35 pm
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு சைட் டிஷாக எப்போதும் சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும் என்பதில்லை, குருமா, பாயா போன்ற சைட் டிஷ் செய்தால் வழக்கத்தை விட கூடுதலாகவே சாப்பிடலாம். ஆனால் தினமும் அசைவம் எடுத்து சமைக்க முடியாது. ஆகவே அசைவம் ஸ்டைலில் அருமையான தக்காளி குருமா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.
தக்காளி குருமா செய்ய முதலில் மசாலா ரெடி பண்ணி கொள்ளலாம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி துருவிய தேங்காய், 4 பச்சை மிளகாய், 10 முந்திரி பருப்பு ,1 1/2 தேக்கரண்டி மிளகு, 1கரண்டி சோம்பு, 5 பல் பூண்டு மற்றும் 1 துண்டு இஞ்சி ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
இப்போது குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் 1 பட்டை, 2 கிராம்பு,1/2 கரண்டி சோம்பு, 1/2 கரண்டி மிளகு சேர்க்கவும். மசாலா பொருட்கள் பொரிந்த பிறகு ஒரு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும் நாம் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து கிளறவும். இவற்றின் பச்சை வாசனை போனவுடன் மூன்று நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி ஓரளவு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரவிட்டு எடுக்கவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0
0