உடுப்பி ஸ்டைல்ல வாழைக்காய் வறுவல் செய்து பார்த்துள்ளீர்களா???

Author: Hemalatha Ramkumar
24 June 2023, 7:52 pm

உடுப்பி ஸ்டைல் வாழைக்காய் வறுவல் ரொம்ப ஃபேமஸ். அதனை நாம் ஈசியாக நமது வீடுகளில் செய்து சாப்பிடலாம். உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட ஆசையாக இருந்தால் அதற்கான ரெசிபியை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்தால் நிச்சயமாக அன்று உங்களுக்கு பாராட்டு நிச்சயம். இப்பொழுது ரெசிபியை பார்க்கலாம் வாருங்கள்.

உடுப்பி ஸ்டைல் வாழைக்காய் வறுவலின் ரகசியமே அதில் சேர்க்கப்படும் ஒரு மசாலாவில் தான் உள்ளது. அதனை முதலில் நாம் அரைத்துக் கொள்ளலாம். அதற்கு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் 10 சின்ன வெங்காயம், 10 மிளகு, அரை ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு கைப்பிடி அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைத்துக் கொள்ளலாம். பின்னர் இதனை ஆற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வாழைக்காய் ஒன்றை எடுத்து அதன் தோலை சீவி உங்களுக்கு விருப்பமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இந்த நறுக்கிய வாழைக்காயை எண்ணெய் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். வாழைக்காய் முக்கால் பதத்திற்கு வெந்தால் போதும். இதன் பிறகு அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள விழுது, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை மற்றும் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் நாம் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக பிரட்டுங்கள். மசாலா வாழைக்காயோடு நன்றாக கலந்து வரும் வரை கிளறி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் நமது அசத்தலான உடுப்பி ஸ்டைல் வாழைக்காய் வறுவல் இப்பொழுது தயார்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!