சுட சுட சாதத்துல இந்த வெண்டைக்காய் புளிக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு பாருங்க… சும்மா அட்டகாசமா இருக்கும்…!!!

Author: Hemalatha Ramkumar
2 May 2022, 1:36 pm

இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி வெண்டைக்காய் புளிக்குழம்பு . சுடச்சுட சாதத்திற்கு இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு சூப்பர் சைடிஷ்‌ தொட்டு சாப்பிட வத்தல், அப்பளம் இருந்தாலே‌ போதும். இந்தக் குழம்புடன்எ தேங்காய் அரைத்து சேர்ப்பதால் ருசி அருமையாக இருக்கும். இந்த குழம்பை‌ இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 200( கிராம்)
வெங்காயம் – 20
தக்காளி – 2( மீடியம் சைஸ் )
கறிவேப்பிலை – 1 கொத்து
புளி – ஒரு எலுமிச்சை அளவு
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதன் வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் ‌4 சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பின்பு புளியை கரைத்து அதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

*தக்காளி தோல் சுருங்கி வந்தவுடன், சிறு துண்டுகளாக வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கிளறி விடவும் ‌.

*பின்பு மசாலாத்தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து , சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

*பிறகு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

* சுடச்சுட இந்தக் குழம்பை சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ‌ருசியாக‌ இருக்கும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!