கீரை ஃப்ரைட் ரைஸ்: இனி குழந்தைகளிடம் கீரை சாப்பிட கெஞ்ச வேண்டாம்… அவர்களே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

Author: Hemalatha Ramkumar
19 September 2024, 7:07 pm

கீரை என்றாலே அனைவருக்குமே ஒரு சலிப்பு நிச்சயமாக இருக்கும் அதிலும் கீரை சாதம் என்றால் கேட்கவே வேண்டாம் ஆனால் கீரை பிரைட் ரைஸ் செய்து கொடுத்துப் பாருங்கள் கண்டிப்பாக அனைவரும் ஆசையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கீரையை பொரித்து எடுத்து விட்டதால் அதன் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குறைந்து விடுமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் இப்படி செய்து சாப்பிடுவதால் தவறொன்றும் இல்லை. கடைகளில் விற்பனை செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு இது பல மடங்கு பரவாயில்லை.

கீரை பிரைட் ரைஸ் செய்வதற்கு ஒரு அகலமான கிண்ணத்தில் 150 கிராம் கீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி தண்ணீர் அனைத்தையும் பிழிந்து விட்டு சேர்க்கவும்.

இதனோடு தேவையான அளவு உப்பு, 1/2 கப் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இது கீரைக்கு ஒரு லேசான கோட்டிங் வழங்குவதற்காக சேர்க்கப்படுகிறது.

இப்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றவும். நாம் பிரட்டி வைத்துள்ள கீரையை சேர்த்து பொரித்து எடுங்கள்.

கீரை நன்றாக பொரிந்த உடன் எண்ணெயை வடித்து விட்டு தனியாக ஒரு தட்டில் எடுத்து வையுங்கள்.

கீரை உதிரி உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் நேரம் ஆனாலும் கூட மொறுமொறுப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

இதனை அப்படியே ஒரு ஸ்நாக்ஸாக கீரை பக்கோடா போல சாப்பிடலாம்.

இப்போது கீரை ஃபிரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம்.

அதற்கு வாணலை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலையை மிதமான தீயில் வறுக்கவும்.

கடலை வறுபட்டதும் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு, 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, 5 முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் எள்ளு சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் 3 கப் வேகவைத்த சாதம் மற்றும் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

இதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக நாம் பொரித்து வைத்துள்ள கீரையை சேர்த்து கிளறவும்.

இப்போது நம்முடைய சுவையான கீரை பிரைட் ரைஸ் தயாராக உள்ளது. குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். நிச்சயமாக இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 337

    0

    0