இந்த மாதிரி ஒரு முறை கறிவேப்பிலை குழம்பு செய்து பாருங்க… வடிச்ச சாதம் எதுவும் மிச்சம் இருக்காது!!!

Author: Hemalatha Ramkumar
1 June 2022, 6:50 pm

தென் இந்தியர்களின் மதிய உணவானது ஒரு குழம்பு இல்லாமல் நிறைவடையாது. ஆனால் தினமும் என்ன குழம்பு வைக்கலாம் என்பதை யோசிப்பது மிகவும் கஷ்டம். ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயம் சுவையாகவும், அனைவருக்கும் பிடித்தமாதிரியும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கறிவேப்பிலை வைத்து ஒரு மசாலா குழம்பு. இது சுவையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், சருமம், தலைமுடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு- ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
காய்ந்த மிளகாய் – 2
கடுகு- ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
புளி- எலுமிச்சை பழம் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
*முதலில் கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உலர வைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் உலர வைத்த கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தனியாக வையுங்கள்.

*அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கறிவேப்பிலையோடு ஆற வையுங்கள்.

*நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

*இதனோடு புளியையும் சேர்த்து அரைக்கவும்.

*அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழம்பு போல கரைத்து வைக்கவும்.

*இப்போது கடாயில் உள்ள எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

*தாளித்த பின் நாம் கரைத்து வைத்த கலைவையை ஊறவைத்து கொதிக்க விடவும்.

*பச்சை வாசனை போனதும் அதில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!