கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி: இதுக்கு பத்து இட்லி கூட சாப்பிடலாம்!!!
Author: Hemalatha Ramkumar4 September 2024, 2:32 pm
காலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் செய்யப்படுகிறது. இது அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது. எனினும் இந்த சலிப்பை முற்றிலுமாக போக்குவதற்கு தினமும் இட்லி, தோசை செய்தாலும் அதற்கு விதவிதமான சைட் டிஷ் செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் ஆசையாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி. இது இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாமல் சாதத்துக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இப்போது இந்த தக்காளி பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம்- 15-20 தக்காளி- 5
கடுகு- 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்- 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய்- 4-5
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை மிளகாய் தூள்- 2 டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை தேவையான அளவு
செய்முறை
கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி செய்வதற்கு முதலில் குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளலாம். குக்கர் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த உடன் கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். இப்போது 4 முதல் 5 வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக 15 முதல் 20 சின்ன வெங்காயத்தை நறுக்காமல் முழுவதுமாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் நறுக்கி வைத்த 5 தக்காளியை சேர்க்கவும். தக்காளி சாஃப்ட்டாக வதங்கியதும் அதில் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
இந்த சமயத்தில் உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து குக்கரை திறந்து அதில் உள்ள தண்ணீரை தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வேக வைத்த பொருட்களோடு கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு மத்து வைத்து நன்றாக கடையவும். கடைந்த பிறகு நாம் வடிகட்டி எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறினால் அருமையான கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி தயார். இது இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு அட்டகாசமாக சைட் டிஷாக இருக்கும்.