அனைவருக்கும் மிகவும் ஃபேவரட்டான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசால் ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar5 September 2024, 6:02 pm
கல்யாண வீடு சாப்பாடு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கல்யாண வீட்டில் குறிப்பாக சாப்பாட்டிற்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். கல்யாண விருந்தில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவுமே அற்புதமான சுவையோடு உண்பவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் கல்யாண வீட்டில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு அனைவருக்கும் விருப்பமான ஒன்று. இதனை நமது வீட்டில் எப்படி செய்வது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1/2 கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு
3 தேக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி கடலை பருப்பு
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
3 வர மிளகாய்
1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
2 பெரிய வெங்காயம்
1 கொத்து கறிவேப்பிலை
4 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 தக்காளி
தேவையான அளவு உப்பு
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி தனியா தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
சிறிதளவு கொத்தமல்லி தழை
1/2 கப் தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பிறகு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு வர மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்குங்கள்.
பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். அடுத்தபடியாக இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறுங்கள். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பிறகு தக்காளி, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வையுங்கள். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசாலாவோடு நன்றாக பிரட்டவும். இறுதியாக கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சூப்பரான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு தயார்.