யாரும் கண்டுபிடிக்காத மாதிரி தக்காளி சாதத்தையே பிரியாணி மாதிரி எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா…!!!

Author: Hemalatha Ramkumar
11 September 2024, 7:03 pm

டிபன் பாக்ஸ்க்கு என்ன கட்டிக் கொடுப்பது என்று யோசிப்பதே பெரும்பாலான பெண்களுக்கு கடுப்பான ஒரு விஷயமாக உள்ளது. சுவையாகவும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டிய உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் பிரியாணி என்றால் நிச்சயமாக குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் தினமும் பிரியாணி செய்து கொடுப்பது கஷ்டம் தான். எனவே தக்காளி சாதத்தையே நீங்கள் பிரியாணி மாதிரி செய்து கொடுத்தால் நிச்சயமாக அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் தக்காளி சாதத்தை பிரியாணி ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

1 பட்டை 

1 கிராம்பு 

1 ஏலக்காய் 

1 பிரியாணி இலை

1 டேபிள் ஸ்பூன் சோம்பு

3 பெரிய வெங்காயம் 

4 தக்காளி

1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சிறிதளவு கொத்தமல்லித்தழை மற்றும் புதினா 

ஒரு கொத்து கருவேப்பிலை 

2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் 

1 டேபிள் ஸ்பூன் நெய்

1 டம்ளர் அரிசி

செய்முறை

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு ஆகிய மசாலா பொருட்களை சேர்க்கவும். 10 வினாடிகள் கழித்து மூன்று பெரிய வெங்காயத்தை நீலவாக்கில் வெட்டி அதனை சேர்த்துக் கொள்ளவும். 

வெங்காயம் பிரவுன் நிறமாக மாறி நன்றாக வதங்கும் வரை காத்திருக்கவும். பின்னர் இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கும் பொழுது உப்பு சேர்த்து வதக்கினால் விரைவாக வதங்கி விடும். 

அடுத்தபடியாக ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பிறகு நான்கு தக்காளியை நறுக்கி அதனை சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சாதத்திற்கு தக்காளி அதிக அளவில் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். 

தக்காளி வதங்கியதும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி கொள்ளலாம். பின்னர் ஒரு கிளாஸ் அரிசியை கழுவி சுத்தம் செய்து அதனை சேர்க்கவும். ஒரு கிளாஸ் அரிசிக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் என்ற அளவு ஊற்றி இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் புதினா இலைகள் தூவி குக்கரை மூடவும். குக்கரில் மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.

  • இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!