குளிரடிக்கும் மழையில் வயிற்றுக்கு இதமா கமகமன்னு ரசம் சாதம் செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம்னு சொல்லுவாங்க!!!
Author: Hemalatha Ramkumar21 October 2024, 7:43 pm
இந்த மழைக்கு இதமாக காரசாரமான ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்… சும்மா அடி தூளா இருக்கும்ல?? இந்த ரசம் சாதம் மழைக்கால பசியை அடக்குவதற்கு மட்டுமல்லாமல் இந்த சமயத்தில் பரவும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. வெறும் அப்பளம், ஊறுகாய் இருந்தால் போதும் இந்த ரசம் சாதத்தை சூப்பராக சாப்பிட்டு முடித்து விடலாம். இப்போது ஒன் பாட் ரசம் சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாப்பாட்டு அரிசி
தக்காளி
சின்ன வெங்காயம்
வரமிளகாய்
பச்சை மிளகாய்
கடுகு
மிளகு
சீரகம்
கறிவேப்பிலை
புளி
கொத்தமல்லி
நெய்
சமையல் எண்ணெய்
உப்பு
செய்முறை
*ஒன் பாட் ரசம் சாதம் செய்ய முதலில் ஒரு டம்ளர் அரிசி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
*ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
*நெய் உருகியதும் 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, 8 இடித்த பூண்டு, 6 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
*பின்னர் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
*இப்போது ஒரு டம்ளர் அளவு அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
*தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை நன்றாக சுத்தம் செய்து சேர்த்து கிளறவும்.
*குக்கரில் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
*குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் ஒரு எலுமிச்சை அளவு புளியை கரைத்து அந்த புளி கரைசலையும் வேகவைத்த சாதத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
*புளியின் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்.
*இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் கமகம என்று ரசம் சாதம் தயார்.
* இப்போது ஒரு வாழை இலையில் 2 கரண்டி ரசம் சாதத்தை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யை மேலே ஊற்றி அப்பளத்தோடு தொட்டு சாப்பிட்டு பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: லிஃப்ட்டுக்குள்ள கண்ணாடி வைக்கிறதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா…???