வெயிலுக்கு இதமா குளு குளுன்னு செம டேஸ்டா தர்பூசணி ஜூஸ் ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar20 April 2022, 4:22 pm
கோடைக்காலம் வந்து விட்டாலே, சூரியனின் தாக்கம் அதிகமாகி விடுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்த சமயம் அடிக்கடி பசியின்மையும், அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உடல் சூடும் அதிகரிக்கிறது. இப்படி, வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து குறைவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறி , பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். அப்படி, நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று தர்பூசணி. தர்பூசணியை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் , தர்பூசணி ஜுஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் – 1 பெரிய துண்டு
தர்பூசணி பழம் – பொடியாக நறுக்கியது சிறிதளவு
துளசி விதைகள்(சப்ஜா விதை) – 1 தேக்கரண்டி
பால் காய்ச்சியது – 1(டம்ளர்)
சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ்கட்டி – தேவையான அளவு
செய்முறை:
*ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
*ஒரு பெரிய துண்டு தர்பூசணி யை விதைகளை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
* பின்பு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். பின் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
*ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும்.
*ஒரு டம்ளரில் பொடியாக நறுக்கிய தர்பூசணி பழத்தை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
*அதனுடன் 3 தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதைகளையும் மற்றும் ஐஸ்கட்டிகளையும் சேர்க்கவும்.
*தர்பூசணி ஜுஸை அதில் ஊற்றவும்.
*டம்ளரில் ஊற்றி ஒரு துண்டு தர்பூசணியை டம்ளரின் மேல் வைத்து பரிமாறவும்.
*இப்போது சுவையான, ஆரோக்கியமான , உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது தர்பூசணி ஜுஸ் தயார்.