இந்த மாதிரி குருமா பண்ணா சப்பாத்தி, பூரி, சாதம்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்!!!
Author: Hemalatha Ramkumar15 April 2022, 4:24 pm
வெஜிடபிள் குருமா கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வெஜிடபிள் குருமாவை சாதம், சப்பாத்தி, தோசை,பூரி, இட்லி மற்றும் பரோட்டா உடன் பரிமாறலாம். காய்கறிகள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான இந்த வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய கேரட் -1கப்
பச்சை பட்டாணி – 1கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ்- 1கப்
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு- 1கப்
நறுக்கிய காலிஃப்ளவர் -1கப்
பெரிய வெங்காயம்- 1(நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி- 1(நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3(நடுவில் கீறியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 4தேக்கரண்டி
கசகசா- 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி – 8
மசாலா பொருட்கள்:
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
பட்டை -1 இன்ச்
ஏலக்காய் -3
லவங்கம் -3
அரைக்க வேண்டியவை:
தேங்காய் விழுது அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் 4 தேக்கரண்டி துருவிய தேங்காய்,1/2 தேக்கரண்டி கசகசா,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,10 முந்திரி ஆகியவற்றை சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
*அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும்,1bசிறியதுண்டு பட்டை,3 ஏலக்காய்,3 லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
*1பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்க்கவும். பின் நீளவாக்கில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*வதக்கிய பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். பின்பு, மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்துவிட்டு. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு. தண்ணீர் சேர்த்து மூடிப் போட்டு காய்கறிகளை நன்கு வேகவிடவும்.
*காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும், பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.