வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதால் தடுக்கப்படும் நோய்கள்!!!
Author: Hemalatha Ramkumar4 February 2023, 9:59 am
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை உள்ளது. காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுகளில் காணப்படும் இயற்கை சர்க்கரைகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்படும் உணவுப்பொருட்களான ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக்குகள், மிட்டாய், சோடா மற்றும் இனிப்பான காபி பானங்கள் போன்றவைகளை குறைப்பது நல்லது.
இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்பட்டு நீரிழிவு நோயின் தாக்கம் குறைக்கப்படுகிறது. புரதம் மற்றும் நார்ச்சத்துடன் சர்க்கரை சேர்க்காமல் உண்பது உடல் எடையை குறைக்க உதவும். மேலும் பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் போன்றவை கணிசமாக குறைகிறது. ஏனெனில் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையுடன் சேர்ந்து அமிலத்தை உற்பத்தி செய்து நமது பற்களை சேதப்படுத்துகிறது.
அதிக சர்க்கரை உள்ள உணவுகள், குறிப்பாக அதிக பிரக்டோஸ் உள்ள உணவுகள், ஆல்கஹால் அல்லாத கல்லீரலில் கொழுப்பு (NAFLD) வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே அதிக சர்க்கரை உள்ள உணவுகளை குறைப்பது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் LDL (கெட்ட) கொழுப்பு அதிகரித்தல் உள்ளிட்ட இதய நோய் ஆபத்துகளை உருவாக்குகிறது. எனவே சர்க்கரையை குறைப்பதால் இருதயநோய் அபாயம் குறைகிறது. அதிக சர்க்கரை உண்பது முகப்பருவை அதிகரிகிறது மற்றும் தோல் முதிர்ச்சியை உண்டாக்குகிறது. எனவே நாம் உணவில் சர்க்கரையை குறைப்பதால் இது போன்ற பிரச்சினைகளை குறைக்கலாம்.