நீங்க சிரிச்சா மட்டும் போதும்… நோயில்லாம ஜாலியா வாழலாம்!!!
Author: Hemalatha Ramkumar19 October 2024, 12:42 pm
சிரிப்பு என்பது உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைப்பது முதல் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை சிரிப்பு பல்வேறு உடல்நலம் சார்ந்த நன்மைகளை தருவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரிப்பானது நம்முடைய உடல், மன நலனில் பாசிடிவான விளைவுகளை உருவாக்குகிறது.
பாரம்பரிய மருந்துக்கு கூடுதலாக உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சிரிப்பின் முக்கியத்துவத்தை பல மருத்துவ நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். சிரிப்பின் குணப்படுத்தும் வலிமை என்பது மனதளவில் மட்டுமல்லாமல் நம்முடைய நோய் எதிர்ப்பு செயல்பாடு, வலியை குறைப்பது மற்றும் மனநிலையை மேம்படுத்துவது என பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இந்த பதிவில் நம்முடைய ஆரோக்கியத்திற்கான சிறந்த சிகிச்சையாக சிரிப்பு கருதப்படுவதற்கான காரணங்களை பற்றி பார்க்கலாம்.
நீங்கள் சிரிக்கும் போது உங்கள் உடலில் கார்ட்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் குறைகிறது. இந்த ஹார்மோன் அளவு குறைந்தால் தசைகளில் உள்ள பதட்டம் குறைந்து, உடலுக்கு ஓய்வு கிடைத்து, மன அழுத்தம் குறையும். சிரித்த பிறகு கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள். எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு சிறந்த வழி. கூடுதலாக சிரிக்கும் போது நம்முடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் என்டார்பின்கள் உருவாக்கப்படுகிறது. இது பதட்டத்தை போக்கி மனநிலையை மேம்படுத்துகிறது. நாள்பட்ட மன அழுத்தம் இருப்பவர்கள் பிற சிகிச்சைகளோடு சேர்த்து இந்த லாபிங் தெரப்பியையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிரிக்கும் போது நம்முடைய உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தி அதிகமாகி, தொற்றுகள் மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கு எதிராக சண்டையிடும் T- செல்கள் ஆக்டிவேட் செய்யப்படுகின்றன. இதனால் நமக்கு சளி, இருமல் மற்றும் பிற தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதையும் படிக்கலாமே: காஷ்மீரி தம் ஆலு: சப்பாத்தி, பூரிக்கு செம காம்பினேஷனா இருக்கும்… டிரை பண்ணி பாருங்க!!!
சிரிக்கும் பயிற்சியில் ஈடுபடுவது உங்களுடைய இதயத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை வளப்படுத்தும். சிரிப்பதால் உங்களுடைய இதயத்துடிப்பு விகிதம் அதிகரித்து, நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இது கிட்டத்தட்ட ஒரு லேசான ஏரோபிக் பயிற்சிக்கு ஈடாகும். சிரிக்கும்போது ரத்த நாளங்களின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டு, ரத்த அழுத்தம் குறையும். மேலும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
சிரிப்பது உங்களுடைய மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இயற்கை வலி நிவாரணியாகவும் அமைகிறது. சிரிப்பானது நம்முடைய மூளையில் வலியை குறைக்கும் கெமிக்கல்களை தூண்டுகிறது. எனவே இது நாள்பட்ட வலிக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. ஆர்த்ரைட்டிஸ் அல்லது மைக்ரைன் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சிறிது நேரம் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எந்த வித பக்க விளைவும் இல்லாத இந்த சிரிப்பு பயிற்சியை முயற்சி செய்யலாம்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனசோர்வை கையாள்வதற்கு மனநல நிபுணர்கள் பெரும்பாலும் லாபிங் தெரப்பியை வழங்குகின்றனர். சிரிப்பு மூலம் கெட்ட எண்ணங்களில் இருந்து விடுபட்டு வாழ்க்கை மீது ஒரு நேர்மறையான தாக்கம் உருவாகிறது. மனதில் உள்ள எமோஷன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் போது இந்த லாஃப்டர் தெரப்பி பயன்படுத்தப்படுகிறது.
எனவே உங்களுடைய உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துவதற்கு சிரிப்பது நிச்சயமாக ஒரு வலிமையான கருவி. பாரம்பரிய மருந்துக்கு பதிலாக இதனை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. மாறாக பிற சிகிச்சையோடு சேர்த்து இதனையும் உங்களுடைய அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தால் நிச்சயமாக நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.