காலை தினம் ஒரு நெல்லிக்காய்… உங்க ஆரோக்கியத்த வேற லெவலுக்கு கொண்டு போய்விடும்!!!
Author: Hemalatha Ramkumar4 September 2024, 4:34 pm
காலையில் நாம் பின்பற்றக்கூடிய வழக்கங்கள் நமது மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நம்முடைய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நமது குடலின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அவசியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் காலை வெறும் வயிற்றில் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் சிறந்த முறையில் வைத்திருப்பதற்கு உதவுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமையும் நெல்லிக்காயில் அதிக அளவு இயற்கையான ஆன்டி ஆக்சிடன்ட்களும், வைட்டமின் சி ஊட்டச்சத்தும் காணப்படுகிறது. இது நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவது, திசுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவது போன்ற நன்மைகளை வழங்குகிறது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகள் மற்றும் உடல்நல கோளாறுகளுக்கு எதிராக நமது உடல் சண்டையிடுவதற்கு உதவுகிறது.
செரிமான நொதிகளை தூண்டி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாக செரிமானத்திற்கு துணை புரிந்து, ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.
ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் கொலாஜன் உற்பத்திக்கு துணைபுரிந்து, நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து, இளமையான சருமத்தை வழங்குகிறது. தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்தல் பிரச்சனை குறையும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக பலனடையலாம். நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு இரும்பு சத்து மற்றும் கரோட்டின் காரணமாக இது தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதற்கு நெல்லிக்காய் பல்வேறு விதத்தில் உதவுகிறது. இதன் விளைவாக நமக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகிறது.
நமது உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, நச்சு கழிவுகளை நெல்லிக்காய் அகற்றுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது பசியை கட்டுப்படுத்தி, கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. இதன் விளைவாக உடல் எடையை எளிமையாக குறைத்து விடலாம்.
நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.
ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது. இதன் காரணமாக டயாபட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் நெல்லிக்காய் ஒரு அமிர்தமாக திகழ்கிறது.
வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த நெல்லிக்காய் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ஆர்தரைட்டிஸ் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதனை அதிகப்படியாக சாப்பிடுவது வயிற்றுப்போக்கை உண்டாக்கலாம். மேலும் நெல்லிக்காயில் அமிலத்தன்மை இயற்கையாகவே இருப்பதால் நெஞ்செரிச்சல் அல்லது வயிறு அசௌரியம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் நெல்லிக்காயை தவிர்க்க வேண்டும். அதிக அளவு நெல்லிக்காய் சாப்பிடுவது வறட்சியை உண்டாக்கலாம். இதன் விளைவாக வரண்ட சருமம் அல்லது வறண்ட மயிர்க்கால்கள் ஏற்பட்டு பொடுகு பிரச்சனை உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.