ஆப்பிள் மட்டுமில்லை, இதை தினமும் கொஞ்சமா சாப்பிட்டா கூட நீங்க டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!!!

Author: Hemalatha Ramkumar
18 September 2024, 10:36 am

குறிப்பிட்ட பாக்டீரியாக்களை பயன்படுத்தி பாலை புளிக்க வைக்கும் பொழுது நமக்கு தயிர் கிடைக்கிறது. இதில் நம்ப முடியாத அளவு பல்வேறு ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் அற்புதமான சுவை ஒருபுறம் இருந்தாலும், நமது ஆரோக்கியத்திற்கு இது வழங்கும் நலன்களுக்காகவே தினமும் நம்முடைய உணவில் தயிரை சேர்த்து சாப்பிடுவது அவசியம். இப்போது தினமும் நமது உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நல்ல குடல் ஆரோக்கியம்

தயிரில் உள்ள மிகவும் அறியப்பட்ட நன்மைகளில் ஒன்று அதில் காணப்படும் அதிக அளவு ப்ரோபயாட்டிக். இந்த உயிருடன் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியமானவை. ப்ரோபயாடிக் உணவை உடைத்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவித்து, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

ஆரோக்கியமான குடல் என்பது சிறந்த நோய் எதிர்ப்பு அமைப்போடு தொடர்பு கொண்டுள்ளது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நுண்ணுயிரிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு சண்டையிடுவதை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கிறது. தயிரில் வைட்டமின் D, ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை வலுவான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அவசியமானவை.

எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது வலிமையான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதற்கு அவசியமான கால்சியம் தாதுவின் அற்புதமான மூலமாக தயிர் விளங்குகிறது. தயிரில் உள்ள அதிக அளவு வைட்டமின் D கால்சியம் உறிஞ்சப்படுவதை உறுதி செய்து, நமது உடலுக்கு இந்த அத்தியாவசிய தாது போதுமான அளவு கிடைக்க பெறுவதற்கு உதவி செய்கிறது. வழக்கமான முறையில் தயிர் சாப்பிட்டு வந்தால் நம்முடைய எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் நமக்கு வயதாகும் பொழுது ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உடல் எடை பராமரிப்பு

தயிரானது புரதத்தின் அற்புதமான மூலமாக இருப்பதால் இது நாள் முழுவதும் உங்களை வயிறு நிரம்பிய உணர்வோடு வைக்கிறது. இதனால் உங்களுடைய பசி கட்டுப்படுத்தப்பட்டு நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவு குறைகிறது. எனவே ஒருவேளை நீங்கள் உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணத்தில் இருக்கிறீர்களானால் நிச்சயமாக தயிரை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

சருமம் மற்றும் தலைமுடிக்கான பலன்கள்

உடல் ஆரோக்கியத்தையும் தாண்டி தயிர் சருமம் மற்றும் தலைமுடிக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை அளிக்கிறது. தயிரில் காணப்படும் ஒரு சில வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, தலைமுடி உதிர்வை தடுக்க உதவுகிறது. சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்புக்கு இயற்கையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அணுகுமுறையை மேற்கொள்ள உங்களுடைய அன்றாட உணவில் சிறிதளவு தயிர் சேர்த்து சாப்பிடுங்கள். அது மட்டுமல்லாமல் ஹேர் கேர் மற்றும் ஸ்கின் கேர் மாஸ்க்குகளிலும் தயிரை நீங்கள் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!