தலைமுடி, சருமம், உடல் ஆரோக்கியம்… 3 இன் 1 பலன்கள் தரும் கருப்பு விதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
14 November 2024, 2:07 pm

கருப்பு விதைகளில் உள்ள நம்ப முடியாத ஆரோக்கிய பலன்கள் காரணமாக இது ஊட்டச்சத்து நிறைந்த விதைகளில் மிகவும் முதன்மையானதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கருப்பு விதைகள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. இந்த சிறிய விதைகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, வீக்கத்தை குறைப்பது மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது போன்ற பலன்களை தருகிறது. அது மட்டுமல்லாமல் இதில் உள்ள ஆன்டி-டயாபட்டிக் பண்புகள் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குகிறது. மேலும் கருப்பு விதைகள் ஆரோக்கியமான சருமம், தலைமுடி மற்றும் நகங்களை பெறுவதற்கு உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. கருப்பு விதைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நம்முடைய ஆரோக்கியத்தில் நிச்சயமாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய ஐந்து கருப்பு விதைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

சியா விதைகள் 

சியா விதைகள் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கு பல பலன்களை அளிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படும் சியா விதைகள் நம்முடைய இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சியா விதைகள் மினுமினுப்பான சருமத்தை வழங்கி, வீக்கத்தை குறைத்து, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பருக்களை போக்கி நமக்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது. 

எள் விதைகள் 

அடுத்தபடியாக கருப்பு விதைகளில் நாம் பார்க்க இருப்பது எள் விதைகள். இது சருமம், தலைமுடி மற்றும் நம்முடைய மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின் E, கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இது சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்கி, சுருக்கங்களை குறைத்து, ஹைபர் பிக்மென்டேஷனை போக்குகிறது. மேலும் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து மயிர்கால்களுக்கு வலிமை சேர்கிறது. கூடுதலாக இது எலும்பு ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் எள் விதைகளை சாப்பிட்டு வர விரைவில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: உலக நீரிழிவு நோய் தினம் 2024: இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்க என்னென்ன வழி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!!!

கசகசா 

கருப்பு நிற கசகசா நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது. கருப்பு கசகசா வைத்து செய்யப்படும் எண்ணெய் செரிமான பாதையில் ஏற்படும் வீக்கத்தை தணித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. 

கருஞ்சீரகம் 

கருஞ்சீரகத்தில் நம்ப முடியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள கருஞ்சீரகம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, வீக்கத்தை குறைத்து, முகப்பருக்கு எதிராக போராடுகிறது. தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மயிர் கால்களை வலுவாக்கமும் நீங்கள் இந்த விதைகளை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும் கருஞ்சீரகம் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

கடுகு 

அன்றாடம் நாம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் கடுகில் ஏராளமான பலன்கள் உள்ளது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அடங்கிய கடுகு விதைகள் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளித்து, வீக்கத்தை குறைக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் பல ஊட்டச்சத்துக்கள் கடுகில் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் இயற்கையான நீக்க செயல்முறையை துரிதப்படுத்தி உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் இதில் கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் திறன்களும் காணப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 105

    0

    0