அதிகப்படியான மாதவிடாய் இரத்த போக்கிற்கு போலிக் அமிலம் தீர்வாகுமா???

Author: Hemalatha Ramkumar
19 செப்டம்பர் 2024, 1:31 மணி
Quick Share

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிப்பது என்பது அவ்வளவு ஈஸியான காரியம் கிடையாது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், உங்களுடைய மாதவிடாயில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட உங்களை வருத்தம் அடையச் செய்யலாம். எப்போதுமே மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல. இது மெனோர்ஹேஜியா என்று அழைக்கப்படுகிறது. அதாவது 7 நாட்களுக்கு மேல் உங்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, உங்களுடைய நாப்கின்களை நீங்கள் ஒரே நாளில் பலமுறை மாற்றினால் அது மெனோர்ஹேஜியா என்றாகும். எனினும் இதனை சமாளிப்பதற்கு பல்வேறு தீர்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று போலிக் அமிலம். இந்த B வைட்டமின் புதிய செல்கள் உற்பத்தியை ஆதரிக்கிறது. இதனை சப்ளிமெண்ட்கள் அல்லது உணவுகள் வாயிலாக எடுத்துக் கொள்ளலாம். 

போலிக் அமிலம் அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கை சீராக்க உதவுமா? 

B வைட்டமினான போலிக் அமிலம் செல் உற்பத்தி மற்றும் அவற்றை சரி செய்வதற்கு அத்தியாவசியமானது. இது மறைமுகமாக மாதவிடாய் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் போலிக் அமிலம் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப் போக்கை ஒழுங்கமைக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு என்பது ஹார்மோன் சமநிலையின்மை, கருப்பை கட்டிகள் அல்லது வேறு சில மருத்துவ நிலைகளின் காரணமாக ஏற்படலாம். 

மாதவிடாயின் பொழுது போலிக் ஆசிட் சாப்பிடுவது என்று வரும்பொழுது அது உங்களுடைய ஒட்டுமொத்த மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அது அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கை குறைக்காது. 

மாதவிடாயின் பொழுது பலர் போலிக் அமிலம் எடுத்துக் கொள்வதற்கான காரணம் என்ன? 

போலிக் அமிலம் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கை குறைப்பதற்கான எந்த ஒரு வேலையையும் செய்யாது என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஆனால் மாதவிடாயின் பொழுது அதிக ரத்தப்போக்கை ஏற்பட்டால் அது இரும்புச் சத்து குறைபாடு அல்லது ரத்த சோகைக்கு வழிவகுக்கலாம். 

ரத்தசோகை என்பது உடல் முழுவதும் ஆக்சிஜனை சுமந்து செல்லும் சிவப்பு ரத்த அணுக்கள் போதுமான அளவு இல்லாத ஒரு நிலையாகும். ரத்த சோகை ஏற்படும் பொழுது சோர்வு, வலுவிழந்து காணப்படுதல், மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு மற்றும் ரத்த சோகையை அனுபவிக்கும் பெண்களுக்கு போலிக் அமிலம் பயனுள்ளதாக அமையும். இது ரத்த சோகையின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளித்து புதிய செல்கள் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இதன் மூலமாக மாதவிடாயின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. 

மாதவிடாய் ஆரோக்கியத்தில் போலிக் அமிலம் வழங்கும் பிற நலன்கள் 

ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது ஹார்மோன் சமநிலையின்மை, குறிப்பாக அதிக மற்றும் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் என்பது சீரற்ற மாதவிடாய் மற்றும் அதிக ரத்தப்போக்கு வழிவகுக்கலாம். கர்ப்பத்திற்கு உடலை தயார் செய்வதற்கு ஓவுலேஷன் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. அதே நேரத்தில் கர்ப்பம் ஏற்படாத போது மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும். எனினும் தொடர்ச்சியாக ஈஸ்ட்ரோஜின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை குறிக்கிறது. போலிக் அமிலம் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை குறைத்து ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. 

இனப்பெருக்க திறனை அதிகரிக்கிறது 

கருத்தரிக்க முயற்சி செய்து வரும் பெண்களுக்கு போலிக் அமிலம் அவசியம். மலட்டுத்தன்மையை குறைப்பதில் போலிக் அமிலம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே உங்களுடைய இனப்பெருக்க திறனை மேம்படுத்துவதற்கு உங்கள் உடலில் போதுமான அளவு போலிக் அமில அளவுகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். 

ஆரோக்கியமான கர்ப்ப காலம் 

போலிக் அமிலம் என்பது வைட்டமின் B சத்து ஆகும். இது உடலில் ஆரோக்கியமான புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது அனைவருக்கும் அவசியமானது, அதிலும் குறிப்பாக கர்ப்பமான பெண்கள் அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிடும் பெண்களுக்கு தேவை. கருத்தரிப்பதற்கு முன்னரும் கருத்தரித்த பின்னரும் போதுமான அளவு போலிக் அமிலம் பெறுவது கருவில் உள்ள குழந்தைக்கு மூளை குறைபாடு, முதுகுத்தண்டு குறைபாடு அல்லது நரம்பு குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 113

    0

    0

    மறுமொழி இடவும்