இந்த தப்பெல்லாம் பண்ணா காலத்துக்கும் உங்க உடல் எடையை குறைக்கவே முடியாது!!!

Author: Hemalatha Ramkumar
1 October 2024, 5:16 pm

உடலில் உள்ள கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைப்பதற்கு எக்கச்சக்கமான உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட முதலீடு தேவைப்படுகிறது. உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தொடர்ச்சியான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இதற்கான தாரக மந்திரமாக அமைகிறது. சோம்பேறியான நாட்களில் கூட உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற உங்களுடைய தீராத மன உறுதி அவசியம். எனினும் காலை உணவை தவிர்ப்பது அல்லது மிகக் குறைவான கலோரிகளை சாப்பிடுவது போன்றவை உங்களுக்கே எதிரியாக மாறி விடுகிறது. ஆகவே ஒருவேளை நீங்கள் உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்களின் பயணத்திற்கு தடையாக இருக்கும் நீங்கள் செய்யும் பொதுவான சில தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

காலை உணவை தவிர்ப்பது 

இது பெரும்பாலான நபர்கள் செய்யும் பொதுவான ஒரு தவறாகும். அதுவும் இதனால் உடல் எடை குறையும் என்று எண்ணி அவர்கள் இதனை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் காலை உணவை தவிர்ப்பது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. ஆகவே காலை உணவை நீங்கள் தவிர்த்தால் அது உங்களுடைய புரோட்டின் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை பாதித்து, அதனால் உடல் எடை குறைப்பு செயல்முறை மெதுவாகலாம். 

மிகக் குறைந்த கலோரிகளை சாப்பிடுவது

உடல் எடை குறைப்பு என்று வரும் பொழுது குறைவான கலோரியை சாப்பிடுவது முக்கியமானதாக அமைகிறது  அதாவது நாம் சாப்பிடும் கலோரிகளை விட நமது உடலில் எரியும் கலோரிகள் அதிகமாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் அளவுக்கு அதிகமாக மிகக் குறைவான கலோரிகளையும் எடுக்கக் கூடாது. இது உங்களுடைய ஆரோக்கியமான சமநிலையை பாதித்து, உடல் எடை குறைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். 

அதிக அல்லது மிக குறைவான உடற்பயிற்சிகள் 

அளவுக்கு அதிகமான எதுவுமே ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எதுவும் செய்யாமல் இருப்பதும் ஆரோக்கியமானதாக கருதப்படவில்லை. உடல் எடையை குறைக்கும் பொழுது ஒருவர் தன்னுடைய உடலில் உள்ள தசை பருமன் இழக்கப்படவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகிய இரண்டுமே உங்களுடைய உடல் எடை குறைப்பு செயல்முறையில் தடையை ஏற்படுத்தும். 

போதுமான அளவு புரோட்டீன் அல்லது நார்ச்சத்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பது

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து ஆகிய இரண்டும் உங்களுடைய உடல் எடை குறைப்பு டயட்டில் மிக முக்கியமான இரண்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். புரோட்டீன் என்பது தசை வளர்ச்சிக்கும், நார்ச்சத்து என்பது செரிமானம், ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுதல் மற்றும் வளர்சிதை மாற்ற ஊக்கத்திற்கு அவசியம். எனவே உங்களுடைய உணவில் கட்டாயமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 

தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடாமல் இருத்தல்

எந்த ஒரு விஷயத்தை சாதிக்கவும் அதற்கான தொடர்ச்சியான முயற்சி என்பது அவசியம். இது உடல் எடை குறைப்பு பயணத்திற்கும் பொருந்தும். எனவே உங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கு சரியான ஒரு வழக்கத்தை நீங்கள் தொடர்ச்சியான முறையில் பின்பற்ற வேண்டும். சோம்பேறித்தனமான நாட்களில் கூட இதனை நீங்கள் மறவாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுடைய இலக்குகளை உங்களால் அடைய முடியும். 

மோசமான தூக்க அட்டவணை 

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை இருந்த போதிலும் நீங்கள் சரியான அளவு தூக்கத்தை பெறாவிட்டால் அது உங்களுடைய உடல் எடை குறைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தை பாதிக்கும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் அது உங்களுடைய வளர்சிதை மாற்றம், ஆற்றல் அளவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். இந்த தவறுகளை நீங்கள் செய்து வருகிறீர்களானால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த உடல் எடையை உங்களால் அடைய முடியாது. ஆகவே இந்த தவறுகளை திருத்திக் கொண்டு தொடர்ந்து உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணத்தில் ஈடுபட்டு வந்தால் நிச்சயமாக நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 184

    0

    0