ஆண் மலட்டுத்தன்மை என்பது பெரும்பாலும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் இது பல்வேறு தினசரி பழக்கங்களின் காரணமாக ஏற்படலாம். அப்படி ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணமாக அமையும் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமாக ஆடைகள் அமைகின்றது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் ஆண்களின் இனப்பெருக்க திறன் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் அது சம்பந்தமான சில கட்டுக் கதைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். மலட்டுத்தன்மை பிரச்சனை இந்தியாவில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது முக்கியமான ஒரு உடல்நல பிரச்சனையாக மாறி வருகிறது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என்ற உண்மையை பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதனால் பல தம்பதிகள் கருவுறுதலில் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.
ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். அவற்றில் ஹார்மோன் சமநிலையின்மை, மரபணு காரணங்கள், குறைவான விந்தணு எண்ணிக்கை, விந்தணுக்களின் மோசமான நகர்வு திறன், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை அடங்கும். நம்முடைய அன்றாட செயல்பாடுகளை பொறுத்தவரை, இறுக்கமான ஆடைகள் அணிவதாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம். ஒருவேளை நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ், டிரவுசர் அல்லது பேண்டுகளை அணியக்கூடிய ஒருவர் என்றால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
இறுக்கமான ஆடைகள் ஆண்களின் இனப்பெருக்கத் திறனை எவ்வாறு பாதிக்கிறது?
ஆண்களின் இனப்பெருக்க திறன் என்று வரும் பொழுது இறுக்கமான ஆடைகளை அணிவது சிறந்த ஒன்றாக இல்லாமல் போகலாம். இறுக்கமான ஆடைகள் மற்றும் இனப்பெருக்க சம்பந்தமான பிரச்சனைகள் இடையே குறிப்பிட்டதக்க தொடர்பு இருப்பது பல அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இறுக்கமான கீழ் ஆடைகளை அணிவது விந்தணு பையை அளவுக்கு அதிகமாக சூடாக்கி விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் நகர்வு திறனை பாதிக்கிறது. ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு விந்தணுப்பை சுற்றி சீரான வெப்பநிலையை பராமரிப்பது மிகவும் அவசியம். இறுக்கமான ஆடைகள் ரத்த ஓட்டத்தை குறைத்து, அங்கு சூட்டை பிடித்து வைக்கிறது. எனவே எப்பொழுதும் சௌகரியமான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது அவசியம்.
இதையும் படிக்கலாமே: டீ , காபி தவிர குளிருக்கு ஏற்ற ஹெல்தி டிரிங்ஸ் நிறைய இருக்கு!!!
இறுக்கமான ஆடைகள் மற்றும் இனப்பெருக்க திறன் பற்றிய கட்டுக் கதைகளும் உண்மைகளும்
கட்டுக்கதை: இறுக்கமான ஆடைகளை எப்போதாவது அணிவது இனப்பெருக்கத்திறனை பாதிக்காது
உண்மை: இறுக்கமான ஆடைகளை ஒரு சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அணிவதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனினும் நாள் முழுவதும் அதாவது 7 முதல் 8 மணி நேரம் வரை அணிவது வெப்பத்தை அதிகரித்து அழுத்தம் காரணமாக ஆண்களின் இனப்பெருக்கத்திறன் குறைகிறது.
கட்டுக்கதை: ஆண்களின் மலட்டு தன்மைக்கு மரபணுக்கள் மட்டுமே காரணம்
உண்மை: மரபணுக்கள் என்பது ஆண்களின் மலட்டுத்தன்மையில் முக்கியமான பங்கு கொண்டிருந்தாலும் இறுக்கமான ஆடைகள் அணிவது புகைபிடிப்பது, மது அருந்துவது மற்றும் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தில் இருப்பது போன்ற வாழ்க்கை முறை தேர்வுகளும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மதிக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.