செலவில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முத்தான மூலிகைகள்!!!
Author: Hemalatha Ramkumar28 March 2022, 9:51 am
மூலிகைகள் உணவுகளுக்கு சரியான சுவையையும் அமைப்பையும் சேர்க்கின்றன. அதே நேரத்தில் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை இதுவரை கடை பிடித்து வந்திருந்தால், இந்த ஆயுர்வேத மூலிகைகள் உங்கள் பிரச்சினையை தீர்க்கும். நம் உணவில் சேர்க்கக்கூடிய சில முக்கியமான மூலிகைகளை பார்க்கலாம்.
●மஞ்சள்:
இந்த மூலிகையில் கல்லீரல் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள், தோல் பிரச்சனைகள், மற்றும் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உள்ளன. இது முடக்கு வாதம் மற்றும் கீல்வாதத்தை போக்க உதவுகிறது.
மேலும், இது பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்க வல்லது. எனவே இது கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தீக்காயங்கள், வெட்டு காயங்கள் போன்றவற்றிற்கு ஒரு நல்ல மருந்தாகும். நமது உடலின் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகவும் இது பயன்படுகிறது. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க வல்லது.
●நெல்லிக்காய்:
ஆயுர்வேதத்தின் படி, இது அமலாகி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில் நச்சுகள் சேருவதைத் தடுக்கிறது. இது உங்கள் நினைவாற்றல் மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்க ஒரு டானிக்காக செயல்படுகிறது. மேலும் மனதை தெளிவுபடுத்துகிறது. இது உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், சருமத்திற்கு ஊட்டமளித்து, பளபளபாக்கும். கூடுதலாக, இது முடியை ஆரோக்கியமாக வைப்பதோடு இளநரை மற்றும் பொடுகை தடுக்கிறது.
●துளசி:
இந்த செடி புனிதமாக கருதப்படுகிறது மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது. இது நோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இது இருமல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதே நேரத்தில், துளசி தேநீர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு நல்ல மருந்தாக இருக்கும். நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும் இதயத்திற்கு நல்ல ஒரு பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
துளசியானது வாய் துர்நாற்றத்திற்கு சிறந்த தீர்வாகும். ஏனெனில் இது கிருமிநாசினியாக செயல்படுகிறது. இந்த மூலிகை சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் மற்றும் சைனசிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதாகவும் பல ஆயுர்வேத நூல் குறிப்புகள் கூறுகின்றன.
●அமிர்தவல்லி (கிலோய்):
இது சிறந்த ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் உடலியல் செயல்பாடுகளை இயல்பாக்குகிறது. மன அழுத்தத்தை நீக்கி, உடலை அமைதிப்படுத்துகிறது. இது இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றி, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது என்பதால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்கு உதவுகிறது.