உடல் சூட்டை கிடுகிடுவென குறைக்க உதவும் கோடைகால ஸ்பெஷல் உணவுகள்!!!
Author: Hemalatha Ramkumar12 April 2023, 11:25 am
கோடை காலம் படுஜோராக தொடங்கி விட்டது. இந்த சமயத்தில்
உங்கள் உடலை உள்ளே இருந்து குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்! வெப்பநிலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. வெயிலின் மோசமான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. இத்தகைய வெப்பத்தை சமாளிக்க பின்வரும் உணவுகளை உங்கள் கோடைகால டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இளநீர்
இளநீர் கோடைக்கு ஏற்ற ஆரோக்கியமான பானமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இது ஒரு சிறந்த மாற்றாகும். இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியிருப்பதால், இளநீர் கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும். இது உடலை மீண்டும் நீரேற்றம் செய்து நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. மேலும் இது சிறந்த செரிமானத்தையும் ஊக்குவிக்கும்!
மோர்
மோர் குடிப்பது உடலை குளிர்விக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், வானிலை காரணமாக ஏற்படும் குடல் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. மோர் என்பது உடலின் இயல்பான வெப்பநிலையை மீட்டெடுக்கும் புரோபயாடிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு பானமாகும்.
வெள்ளரிக்காய்
அதிக நீர்ச்சத்துடன், வெள்ளரிக்காய்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் B1, B2, B3, B5 மற்றும் B6, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கலைத் தடுக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், கோடை மாதங்களில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. எனவே, நீங்கள் சோர்வாக உணரும் போதெல்லாம் உங்கள் ஆற்றல் நிலைகளை மீட்டெடுக்க, வெள்ளரிக்காயை சாப்பிடவும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் வெப்பம் நிறைந்த காலநிலையில் உங்களுக்கு தேவையான நீர் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை வழங்க வல்ல அற்புதமான ஆதாரமாகும். அவை உடல் வெப்பநிலையைக் குறைக்கவும், ஆற்றல் அளவை மீட்டெடுக்கவும் உதவும். கூடுதலாக, வைட்டமின் சி வெப்பநிலையால் ஏற்படும் தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.
தர்பூசணி
கோடைக்கால சிறந்த பழமான தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது மற்றும் இது தவிர ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். தர்பூசணி உங்கள் மூட்டுகளை சிறப்பாக பராமரிக்கவும், இயற்கையாகவே, உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யவும் உதவும்.
கோடை காலத்தில், மனித உடலுக்கு வழக்கத்தை விட அதிக நீர் தேவைப்படுகிறது. எனவே நீர்ச்சத்தை அதிகரிக்க மற்றும் சரியான உடல் வெப்பநிலையை பராமரிக்க, அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது கடுமையான கோடைகாலத்தை எளிதில் கடக்க உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.