நைட் டைம்ல இந்த உணவுகளை சாப்பிட்டால் அன்றைக்கு சிவராத்திரி தான்!!!
Author: Hemalatha Ramkumar11 December 2024, 2:41 pm
நம்முடைய ஆரோக்கியம், மனநலன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு உணவு என்பது மிக முக்கியமான மற்றும் ஊட்டச்சத்து வழங்க கூடிய ஒன்றாக அமைகிறது. “நாம் சாப்பிடும் உணவுகளின் வெளிப்பாடே நம்முடைய உடல்” என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். எனவே நம்முடைய உடலுக்கு கொடுக்கும் ஒவ்வொரு எரிபொருளையும் மிகவும் கவனமாக கொடுப்பது அவசியம். ஒரு சில உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் நம்மை அதிக ஆற்றலோடு வைத்திருக்கும். அதே நேரத்தில் ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
அதிலும் குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு நல்ல ஆரோக்கியத்திற்கும், தரமான தூக்கத்திற்கும் சில உணவுகளை நாம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஒரு சில உணவுகளை தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்பட்டு அதனால் அசௌகரியம் ஏற்படலாம். உதாரணமாக தூங்குவதற்கு முன்பு ஹெவி மில்ஸ் சாப்பிடுவது அஜீரணம் பிரச்சனையை உண்டாக்கலாம், மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும் மற்றும் காஃபைன் அல்லது மது அருந்துவது தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது இரவு நிம்மதியான மற்றும் தொந்தரவு இல்லாத தூக்கத்தை பெறுவதற்கு உதவும். எனவே குழந்தை போன்ற நல்ல தூக்கத்தை பெறுவதற்கு தூங்குவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.
காஃபைன்
பலர் தூங்குவதற்கு முன்பு ஒரு சிறிய கப் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால் இது உங்களுடைய தூக்கத்தை நிச்சயமாக பாதிக்கும். காஃபைன் என்பது ஒரு தூண்டுதலாக அமைந்து, இரவில் தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
அமிலம் நிறைந்த உணவுகள்
தூங்குவதற்கு முன்பு பழ சாறுகள், பச்சை வெங்காயம், டொமேட்டோ சாஸ் மற்றும் பீட்சா போன்ற அமிலத்தன்மை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில் இவை நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தி, எரிச்சல் அல்லது வயிற்று வலியை உண்டாக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: கண்களை அடிக்கடி கசக்கும் பழக்கம் இருக்கவங்க கவனத்திற்கு!!!
மதுபானம்
இரவு தூங்குவதற்கு முன்பு மது அருந்துவது பலருடைய பொதுவான ஒரு பழக்கமாக உள்ளது. ஆனால் இது உங்களுடைய செரிமான ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதித்து, அதனால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும். மது அருந்திய உடனேயே உங்களுக்கு தூக்கம் வருவது போல தோன்றினாலும், தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் உணவுகள்
பர்கர், பீட்சா, ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஃபிரைஸ் போன்ற உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் தூங்குவதற்கு முன்பு இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். மேலும் இதனால் அடி வயிற்றில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டு உங்களால் தூங்க முடியாமல் போகும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.