இந்த காய்கறிகளை பச்சையா சாப்பிடறது தான் ரொம்ப நல்லது!!!
Author: Hemalatha Ramkumar13 December 2024, 11:20 am
தற்போது உணவுகளை பச்சையாக சாப்பிடுவது என்பது அதில் கிடைக்கக்கூடிய பல்வேறு ஆரோக்கிய நலன்கள் காரணமாக அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. சமையலின் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் என்சைம்கள் அழிக்கப்பட்டு அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. ஒரு சில உணவுகளை சமைக்கும் போது அவற்றின் பலன் மிக மோசமாக குறைகிறது. எனினும் ஒரு சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்கவைத்து ஆரோக்கியமான செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அளவுகளை வழங்குகிறது. அந்த வகையில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதற்கு பச்சையாக சாப்பிட வேண்டிய சில உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ரோக்கோலி
சமைப்பதால் அவற்றில் உள்ள வைட்டமின் C 90% அழிக்கப்படுகிறது மற்றும் நார்சத்து 50% அழிகிறது. பச்சையான ப்ரோக்கோலியில் சல்போரபேன் என்ற வலிமை மிகுந்த கேன்சர் எதிர்ப்பு காம்பவுண்ட் உள்ளது. எனவே இதனை சமைக்காமல் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு செயல்பாடு அதிகரித்து, நச்சு நீக்கம் நடைபெற்று, ஆரோக்கியமான செரிமானம் ஊக்குவிக்கப்படும். ப்ராக்கோலியை நீங்கள் சாலடியில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஜூஸாக பருகலாம்.
வெங்காயம்
வெங்காயத்தை வதக்கும் பொழுது அதில் உள்ள குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் அழிகிறது. எனினும் பச்சையான வெங்காயங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் இது ஆரோக்கியமான இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு தருகிறது. அவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. பச்சையான வெங்காயத்தை சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுவது அதன் அதிகபட்ச பலன்களை பெற்றுத் தரும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
இதையும் படிச்சு பாருங்க: இளநரையை உடனடியா நிறுத்த உங்க டயட்ல இருக்க வேண்டிய உணவுகள்!!!
குடைமிளகாய்
குடைமிளகாயை பச்சையாக சாப்பிடுவதன் மூலமாக அதன் அதிகபட்ச ஊட்டச்சத்தை பெறலாம். அதனை சமைக்கும் பொழுது அவற்றில் உள்ள வைட்டமின்கள் C மற்றும் B குறைகிறது. சமைக்கப்படாத குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் கேன்சர் தடுப்பு ஆகியற்றிற்கு உதவுகிறது. குடைமிளகாயை நீங்கள் சாண்ட்விச் அல்லது ஸ்னாக்ஸ் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இது உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியாகவும் இருக்க செய்யும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம் மற்றும் நச்சு நீக்க செயல்முறைக்கு உதவுகிறது. இதன் இனிப்பான சுவை காரணமாக பீட்ரூட்டை சாலட், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரித்து அறிவுத்திறன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.