கர்ப்பிணி பெண்கள் மறந்து கூட இதெல்லாம் சாப்பிடாதீங்க!!!
Author: Hemalatha Ramkumar7 September 2024, 10:38 am
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு பலரும் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை ஒன்றன்பின் ஒன்றாக வழங்குவது வழக்கம். அதிலும் குறிப்பாக அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்த விஷயங்களை பெரியவர்கள் வலியுறுத்தி கொண்டே இருப்பார்கள். பல உணவுகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தாய் மற்றும் குழந்தைக்கு வழங்கும் அதே சமயத்தில் ஒரு சில உணவுகள் தாய்க்கும் குழந்தைக்கும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
சமைக்கப்படாத அல்லது ஒழுங்காக வேகவைக்கப்படாத கடல் சார்ந்த உணவுகளை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் உள்ள பாக்டீரியா தாய்க்கும் குழந்தைக்கும் மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் கடல் சார்ந்த உணவுகள், இறைச்சி மற்றும் முட்டைகள் ஆகியவற்றை நன்றாக சமைத்த பிறகு சாப்பிட வேண்டும்.
ஒரு சில மீன் வகைகளில் அதிக மெர்க்குரி அளவுகள் இருக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற மீன்களுக்கு பதிலாக குறைந்த மெர்குரி கொண்ட மீன்களை சாப்பிடுங்கள். அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். இந்த அத்தியாவசிய கொழுப்புகள் குழந்தையின் மூளை வளர்வதற்கு மிகவும் அவசியமானது. எனினும் இந்த மீன்களையும் நீங்கள் மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பொழுது ஒருபோதும் பாஸ்சுரைஸ் செய்யப்படாத அல்லது பச்சை பால் மற்றும் சீஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இவற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும். பாஸ்சுரைஸ் செய்யப்படாத பால் மற்றும் சீஸ் வகைகளில் லிஸ்டீரியா என்ற பாக்டீரியம் காணப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களில் மோசமான தொற்றை ஏற்படுத்தி அதன் காரணமாக கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்து பிறத்தல் அல்லது புதிதாக பிறந்த குழந்தைக்கு உடல் நல கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முளைகட்டிய பயிர்களை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய பயிர்களில் ஈ கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. எனவே முளைகட்டிய பயிர்களை நன்றாக வேகவைத்து சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பாக கருதப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் மிதமான அளவு காஃபின் எடுத்துக் கொள்வது நல்லது. அதிகப்படியாக காஃபின் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். அதிக அளவு காஃபின் உடலில் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தி அது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. எனவே ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கு குறைவான அளவு காஃபின் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.