இஞ்சி டீ vs கிரீன் டீ: குளிர்காலத்திற்கு ஏற்றது எது???
Author: Hemalatha Ramkumar25 December 2024, 4:54 pm
குளிர்காலத்தில் சூடான ஒரு கப் காபி அல்லது டீயோடு நம்முடைய நாளை ஆரம்பிப்பதை விட அற்புதமான விஷயம் எதுவாக இருக்க வேண்டும். இந்த சீசனில் குளிர் வானிலையை எதிர்த்துப் போராடவும், உடல் நலப் பிரச்சினைகளை தடுக்கவும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். அதிர்ஷ்டவசமாக, வெதுவெதுப்பான அதே நேரத்தில் பல்வேறு ஆரோக்கிய நலன்கள் தரக்கூடிய ஒரு சில பானங்கள் உள்ளன. அவற்றில் கிரீன் டீ மற்றும் இஞ்சி டீ முக்கியமான குளிர்கால பானங்களாக அமைகின்றன.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த தேநீர் வகைகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூக்கடைப்பை போக்கி, இயற்கையான ஆற்றல் ஊக்கியாக அமைகின்றன. ஆனால் இந்த இடத்தில் எது ஆரோக்கியமானது என்ற கேள்வி எழுகிறது. எனவே இந்த குளிர் காலத்தில் நீங்கள் எந்த தேநீர் வகையை தேர்வு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி டீ
இஞ்சி டீ என்பது காஃபைன் இல்லாத ஃபிரஷ்ஷான இஞ்சி வேர்களை வைத்து செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், உடலை கதகதப்பாக மாற்றுதல், செரிமான பிரச்சனைகளை போக்குதல் மற்றும் வீக்க எதிர்ப்பு விளைவுகளை அளித்தல் போன்ற பல்வேறு உடல்நல பலன்களை அளிக்கிறது. கூடுதலாக இஞ்சி செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவித்து, மூக்கடைப்பு மற்றும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. எனவே உங்களுக்கு சௌகரியத்தை வழங்கி, ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இஞ்சி டீ குளிர்கால வழக்கத்திற்கு ஒரு அற்புதமான பானமாக அமைகிறது.
கிரீன் டீ
ஊட்டச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட கிரீன் டீ தேநீர் இலைகளை ஆவியில் கொதிக்க வைப்பதன் மூலமாக பெறப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த கிரீன் டீ சேதத்தை எதிர்த்து போராடவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் கிரீன் டீ மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடையை குறைத்து உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக நம்முடைய உடலை தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. இதனால் உங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு இந்த எளிமையான பானத்தை கட்டாயமாக நீங்கள் சேர்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: செரிமான பிரச்சனை வந்தாலே உங்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வர வேண்டியது இந்த பொருள்தான்!!!
இஞ்சி டீ vs கிரீன் டீ: இரண்டில் எது ஆரோக்கியமானது?
குளிர்காலத்தில் நம்மை கதகதப்பாக வைக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் தேநீர்கள் மிகவும் உதவியாக இருக்கும். எனினும் இஞ்சி டீ மற்றும் கிரீன் டீ இடையே எதனை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களுடைய உணவு சார்ந்த விருப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் அமைகிறது. சளி, தொண்டைப்புண், வீக்கம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இஞ்சி டீயை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை பெற்றி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கு கிரீன் டீ ஏற்றதாக அமைகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.