தலைவலி, உடல் வலி அம்புட்டும் மாயமா மறைந்து போக பாடி மசாஜ்!!!
Author: Hemalatha Ramkumar4 December 2024, 5:55 pm
நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை பெறுவதற்கான மிகவும் அற்புதமான வழிகளில் ஒன்று அடிக்கடி பாடி மசாஜ் செய்து கொள்வது. பலருக்கு இதனுடைய நன்மைகள் பற்றி தெரிவதில்லை. ஆனால் இதனை நம்முடைய வழக்கத்தில் அதாவது வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ செய்யும் பொழுது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
வழக்கமான முறையில் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. கூடுதலாக இது நச்சுக்களை அகற்றும் நச்சு நீக்க செயல்முறையில் ஈடுபடுகிறது. மசாஜ் செய்வது தசையில் உள்ள பதற்றத்தை போக்கி, இறுக்கத்தை குறைத்து, வலியை போக்கும்.
மேலும் இது உட்கார்ந்த வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. அது மட்டுமல்ல, வழக்கமான முறையில் மசாஜ் செய்வதால் நிணநீர் மண்டலம் தூண்டப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாடி மசாஜ் செய்வதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஒரு புறம் இருக்க மசாஜ் செய்வது நம்முடைய மனநலனையும் மேம்படுத்தும். இது மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற ஹாப்பி ஹார்மோன்களை அதிகரிக்கிறது.
மனதில் உள்ள பதட்டத்தை போக்கி, மனதிற்கு அமைதியூட்டும் விளைவை தருகிறது. இதனால் நம்முடைய தூக்கத்தின் தரம் மேம்படும். ஆகவே வழக்கமான முறையில் மசாஜ் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மன அழுத்தத்தை போக்குகிறது
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளித்து அமைதையூட்டும் விளைவுகளை பெற்று, என்டார்பின்கள் என்ற மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன்களை வெளியிடுவதற்கான ஒரு சிறந்த வழி மசாஜ்.
தலைவலியிலிருந்து நிவாரணம்
இன்றைய பிசியான வாழ்க்கையில் தலைவலி என்பது பலர் அனுபவிக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. இதிலிருந்து விடுபடுவதற்கு எளிமையான ஒரு பாடி மசாஜ் உங்களுக்கு உதவும். மசாஜ் செய்வது கழுத்து, தலை மற்றும் தோள்பட்டைகளில் உள்ள டென்ஷனை போக்கி, தலைவலியிலிருந்து உங்களுக்கு உடனடி நிவாரணம் தரும்.
நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது
உடலின் இயற்கையான நெகிழ்வு தன்மையை அதிகரித்து மூட்டுகள் சிறப்பான முறையில் இயங்குவதற்கு மசாஜ் உதவுகிறது.
நல்ல ரத்த ஓட்டம்
பாடி மசாஜ் செய்வது இயற்கையாகவே ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் மூலமாக ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவுகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இது மறைமுகமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.
நிணநீர் அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
மசாஜ் செய்வதன் மூலமாக நம்முடைய உடல் முழுவதும் நிணநீர் திரவம் சீராக பயணித்து அதனால் மெட்டபாலிசம் செயல்முறையின் போது உண்டாகும் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.