நாள் முழுவதும் ஃப்ரஷா இருக்கணுமா… இந்த கோல்டு வாட்டர் தெரபி உங்களுக்கானது தான்!!!

Author: Hemalatha Ramkumar
13 September 2024, 5:58 pm

காலை எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடிய சிறப்பான விஷயங்களில் ஒன்று உங்கள் மனது மற்றும் உடலை கவனித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான். ஒரு சிலர் காலையில் உடற்பயிற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் தங்களுடைய நரம்பு அமைப்பை ரிலாக்ஸ் செய்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். காலைகள் என்பது மிகவும் பொறுமையாக மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய நேரம். காலை நேரத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவது உங்களை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், எந்தவிதமான சோர்வில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும். 

அந்த வகையில் காலை நேரத்தில் நீங்கள் குளிர்ந்த நீரில் நீராடுவது உங்களை புத்துணர்ச்சியோடு வைக்க உதவும். வேலைக்கு செல்வதற்கு முன்போ அல்லது பள்ளிக்கு செல்லும் மாணவர்களோ காலை நேரத்தில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் அவ்வாறு குளிக்கும் பொழுது குளிர்ந்த நீரை பயன்படுத்துவது நம்ப முடியாத பல பலன்களை நமக்கு அளிக்கும். ஆகவே குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் சில பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது 

காலையில் திடீரென்று சூடான நீரிலிருந்து குளிர்ந்த நீரில் நீராடும் பொழுது அது ரத்த செல்களை தூண்டுவதன் மூலமாக தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. இது உங்களுடைய ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

மனச்சோர்வை போக்குகிறது 

குளிர்ந்த நீர் சிகிச்சை என்பது மன நலனுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. தினமும் காலை குளிர்ந்த நீரில் குளிப்பது மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும் என்பது பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒருவருடைய மனநிலையை மேம்படுத்துவது மற்றும் பதட்டத்தை குறைப்பது போன்ற நன்மைகளையும் அளிக்கிறது. 

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது 

குளிர்ந்த நீரில் நாம் குளிக்கும் பொழுது நமது உடலானது அதன் வெப்பநிலையை பராமரிப்பதற்கான வேலையில் ஈடுபடுகிறது. இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் செல்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. மேலும் உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள் தன்னை மீட்டெடுப்பதற்கு இது பெரிய அளவில் உதவுகிறது. 

வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது

குளிர்ந்த நீரில் நீராடும் பொழுது நமது உடலானது அதன் வெப்பநிலையை பராமரிக்க போதுமான அளவு ஆற்றலை செலவிடுகிறது. இது ஒரு சிறிய அளவு கலோரி எரிப்பதற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக நமது உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இறுதியாக இதனால் உடல் எடை குறைகிறது. 

வீக்கத்தை குறைக்கிறது

குளிர்ந்த நீரில் நீங்கள் குளிப்பதால் ஏற்படும் திடீர் குளிர்ந்த வெப்பநிலை காரணமாக ரத்த நாளங்கள் இறுகி உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது. உடல் அதன் சாதாரண வெப்ப நிலைக்கு திரும்பும் பொழுது ரத்தநாளங்கள் விரிவடைந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை  கொண்டு வருகிறது. இதனால் தசை வலியின் விளைவாக ஏற்பட்ட வீக்கம் குறைகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!