ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க… நாள் முழுக்க ஃபிரஷா ஃபீல் பண்ணுவீங்க!!!
Author: Hemalatha Ramkumar9 January 2025, 10:48 am
ஏலக்காய் என்ற வாசனை மிகுந்த மசாலா பொருள் நிச்சயமாக நம்முடைய சமையலறையில் இருக்கும் ஒரு பொருள். இது உணவுக்கு சுவை அல்லது நிறத்தை சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான வீட்டு சிகிச்சைகளுக்கு சிறந்த ஆப்ஷனாக இருந்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. இந்த வாசனை மிகுந்த ஏலக்காயை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவதன் மூலமாக அதிலும் குறிப்பாக இந்த குளிர்கால மாதங்களில் மெல்லுவது நம் ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை உண்டாக்குகிறது. இதன் நன்மைகள் பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் நவீன அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்கப்படுகிறது. ஆகவே இந்த பதிவில் குளிர்காலத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
சுவாச ஆரோக்கியம்
குளிர் காலம் பொதுவாக இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளை உடன் கொண்டு வருகிறது. சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏலக்காய் ஒரு பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள சினியோல் போன்ற காம்பவுண்டுகள் வீக்க எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவது தொண்டை புண்ணை ஆற்றி, சளி உற்பத்தியை குறைத்து, ஒட்டுமொத்த சுவாசு செயல்பாட்டை மேம்படுத்தும்.
செரிமான பயன்கள்
இந்த குளிர் காலத்தில் உணவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் குறைவான உடல் செயல்பாட்டின் காரணமாக ஒரு சில செரிமான பிரச்சனைகள் வரலாம். எனினும் ஏலக்காய் வாயு, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது. வழக்கமான முறையில் ஏலக்காயை மெல்லும் பொழுது செரிமான நொதிகள் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமானம் சிறந்த முறையில் நடைபெற்று, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகமாகும்.
ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள்
ஏலக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் இது ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. குளிர் காலத்தில் பொதுவாக நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு எளிதில் பாதிக்கப்படலாம். எனவே ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம் அப்படி பார்க்கும் பொழுது ஏலக்காயில் உள்ள ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையாக்கி நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
மனநிலையை மேம்படுத்துகிறது
குளிர் காலத்தில் பெரும்பாலும் நாம் சோம்பேறித்தனமாக உணர்வது வழக்கம். இதற்கு முக்கிய காரணம் குறைவான சூரிய வெளிச்சத்திற்கு நம்மை குறைவாக வெளிப்படுத்திக் கொள்ளுதல். ஆனால் ஏலக்காயை மெல்லும் பொழுது நம்முடைய மனநிலை மேம்படுத்தப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஏலக்காயின் வாசனை நம்முடைய மனநிலையை அதிகரித்து மனநலனை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்கலாமே: பருப்பு மட்டும் வைத்து சிம்பிளா ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்!!!
உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு
ஏலக்காய் குறிப்பாக குளிர்காலங்களில் சாப்பிடும் பொழுது அது உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இந்த மசாலா பொருள் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது. கூடுதலாக ஏலக்காயை மெல்லுவது ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கான நம்முடைய ஆசையை குறைக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் சீராகி நம்முடைய ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மேம்படும்.
வாய்வழி ஆரோக்கியம்
வாயில் ஏலக்காயை போட்டு மெல்லுவது சிறந்த வாய்வழி ஆரோக்கியத்தை கொடுக்கும். இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாயில் துர்நாற்றம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.