உங்களுடைய காலையை ஆரம்பிக்க இதைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா என்ன…???
Author: Hemalatha Ramkumar13 November 2024, 11:23 am
தினமும் காலை எழுந்ததும் சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். தண்ணீர் குடிப்பது மிகவும் அத்தியாவசியமானது. தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு தேவையான நீர்சத்தை வழங்குகிறது. நாளை ஒரு டம்ளர் வெந்நீரோடு ஆரம்பிப்பது உலகம் முழுவதும் உள்ள பல கலாச்சாரங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே தினமும் காலை வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செரிமானம்
தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கக்கூடிய மிக முக்கியமான பலன்களில் மேம்பட்ட செரிமானம் ஒன்று. வெதுவெதுப்பான தண்ணீர் இரைப்பை குடல் பாதையை தூண்டி அன்றைய நாளுக்கான உணவை பெறுவதற்கு அதனை தயார்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் உணவை எளிதாக உடைக்கவும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இது நமக்கு உதவுகிறது. வயிற்று உப்புசம் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
நச்சு நீக்கம்
வெந்நீர் நமது உடலின் இயற்கையான நச்சுநீக்க செயல்முறைக்கு உதவுகிறது. காலையில் வெந்நீர் குடிக்கும் பொழுது நமது உடலில் இரவு முழுவதும் சேமித்து வைக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். வெந்நீர் குடிப்பது நமது உடலின் வெப்பநிலையை லேசாக அதிகரித்து அதன் மூலமாக நமக்கு வியர்த்து நச்சு நீக்க செயல்முறை துரிதப்படுத்தப்படும். வெந்நீரில் எலுமிச்சை சேர்ப்பது இந்த விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துவதோடு நமக்கு தேவையான வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை வழங்கும்.
இதையும் படிக்கலாமே: ஒரு நாளைக்கு எத்தனை பாதம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்கலாம்…???
ரத்த ஓட்டம்
வெந்நீர் குடிப்பது நம்முடைய ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒரு சிலருக்கு காலை நேரங்களில் கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்த நிலையில் இருக்கும். இவர்கள் காலையில் சுடு தண்ணீர் குடித்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நீர்ச்சத்து
உங்களுடைய நாளை ஒரு டம்ளர் வெந்நீரோடு ஆரம்பிப்பது பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. நமக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிட்டால் நம்முடைய ஆற்றல் அளவுகள், கவனம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதும் நமக்கு நீர்ச்சத்தை வழங்கும் என்றாலும் கூட சூடான தண்ணீர் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
தொண்டைப்புண்
அடிக்கடி சுவாச தொற்றுகளால் அவதிப்படுபவர்கள் காலையில் வெந்நீர் குடிப்பது உடனடி நிவாரணம் அளிக்கும். தண்ணீரின் கதகதப்பு தொண்டை புண்ணுக்கு இதமளித்து மூக்கடைப்பை குறைக்கும்.
வெந்நீர் குடிப்பது நமக்கு பலவிதத்தில் நன்மைகள் அளித்தாலும் அதனை பாதுகாப்பான வெப்ப நிலையில் குடிப்பது மிகவும் அவசியம். தண்ணீர் அதிகப்படியாக வெப்பமாக இருந்தால் அது நம்முடைய தொண்டை மற்றும் சுவாச பாதையில் உள்ள திசுக்களை எரிச்சலடைய செய்யலாம். மேலும் தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும்.
0
0