ஆயுளை அதிகரிக்கும் சம்மணமிட்டு சாப்பிடும் பாரம்பரிய முறை!!!
Author: Hemalatha Ramkumar27 September 2024, 7:12 pm
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ கடுமையான விதிகளை பின்பற்றுதல் மற்றும் நமக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பெரும்பாலான நேரங்களில் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் சிறு சிறு முயற்சிகளை எடுப்பதன் மூலமாகவே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். அந்த வகையில் நாம் சாப்பிடும் பொழுது சம்மணமிடுதல் அதாவது சுகாசனத்தில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு பலன் அளிக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பாரம்பரியமான வழக்கம் கைவிடப்பட்டு, பலர் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆனால் நீங்கள் டைனிங் டேபிளில் தான் சாப்பிடுவேன் என்றால், அதிலும் சுகாசனத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் கூட அதன் பலன்களை உங்களால் பெற முடியும். எனினும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தரையில் சுகாசனத்தில் அமர்ந்தபடி சாப்பிடுங்கள். இப்போது சுகாசனத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நல்ல செரிமானம்
சுகாசனம் வயிற்றுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு வைட்டமின் B12 வைட்டமின் D, ஹீமோகுளோபின் போன்றவை சிறந்த முறையில் கிடைக்கும்.
கவனத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கிறது
சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது உங்கள் தோள்பட்டை சிறந்த சதுர வடிவத்தை அடைகிறது. இதனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது குறித்த கவனம் அதிகரிக்கும். இவ்வாறு நீங்கள் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
கீழ் உடலை வலுப்படுத்துகிறது சம்மணமிட்டு கீழே அமர்ந்து சாப்பிட்டால் உங்களுடைய உடலின் நகரும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, நிலைத்தன்மை மற்றும் கீழ் உடலின் வலு அதிகரிக்கிறது.
சுகாசனத்தில் அமர்ந்து சாப்பிடும் இந்த சிறிய முயற்சியை நீங்கள் செய்தாலே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அதிலும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எக்கச்சக்கமான பலன்கள் கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாப்பிடுவது உங்களுடைய ஆயுளை அதிகரிக்கும். ஆகவே இந்த சிறிய முயற்சியை எடுத்து உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை கொடுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
Suhasanam, sitting cross legged, eating habit, benefits of eating cross legged, சம்மணமிடுதல், சுகாசனம்,